வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (31/10/2018)

கடைசி தொடர்பு:19:38 (31/10/2018)

`இனி எந்தக் குழந்தைக்கும் இப்படி நடக்கக் கூடாது' - காய்ச்சலால் இறந்த குழந்தையின் உறவினர் ஆதங்கம்!

சென்னையைச் சேர்ந்த 3 வயதான சிறுவன் மித்ரன், மர்மக் காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். அரசு மருத்துவமனையின் அலட்சியமே குழந்தை இறப்புக்குக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காய்ச்சல்

பெரம்பூரில் உள்ள மதுரை சாமி மடம் வ.உ.சி நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் வினோத். இவரின் மனைவி மேரி. வினோத் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு கனிஷ்கா (6 வயது), மித்ரன் (3 வயது) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். சிறுவன் மித்ரனுக்கு கடந்த ஒருவாரமாக மர்மக் காய்ச்சல் இருந்துள்ளது. இந்நிலையில் இன்று மித்ரன் உயிரிழந்துவிட்டார். அரசு மருத்துவமனையின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாகப் பேசிய உறவினர் அம்மு, ``கடந்த 23-ம் தேதி மித்ரனுக்கு காய்ச்சல் இருந்துச்சு. அதனால, பக்கத்துல இருந்த பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குக் கூப்டு போனோம். அங்க போனப்ப, அங்கிருந்த டாக்டர் வெறுமனே தொட்டுப் பாத்துட்டு மாத்திர கொடுத்து அனுப்பிட்டாரு. செக் பண்ணிக்கூட பாக்கல. அப்புறம் அந்த மாத்திரையைக் குழந்தைக்குக் கொடுத்தோம். இப்படியிருக்கும்போது, நேத்து காலைல காய்ச்சல் ரொம்ப அதிகமாச்சு. பக்கத்துல இருக்குற தனியார் ஹாஸ்பிட்டலுக்குக் கூப்பிட்டுப் போனோம்.

அங்க குழந்தைய பாத்த டாக்டர், ப்ளட் டெஸ்ட் பண்ணச் சொன்னாரு. இன்னைக்கு காலைல குழந்தைக்கு ரொம்ப முடியாம ஆயிடுச்சு. தனியார் டாக்டர்கிட்ட கூப்பிட்டுப் போனா, அவரு பேபி ஹாஸ்பிடலுக்குக் கொண்டுபோகச் சொல்லிட்டாரு. ஆம்புலன்ஸ்க்கு கால் பண்ணி சொன்னோம். ஆனா...'' என்று கண்ணீர் வடித்த அவர், ஒரு நிமிடம் மௌனம் காத்தார். பின்னர், ``குழந்தை இறந்துட்டான்! முன்னாடியே அந்த அரசு மருத்துவமனைல செக் பண்ணி சரியா ட்ரீட்மென்ட் கொடுத்திருந்தா, குழந்தைய காப்பாத்திருக்கலாம். கனிஷ்காவுக்கும் காய்ச்சல் இருக்கு. அந்தப் புள்ளையையும் கூப்பிட்டு போனோம். அப்பவும், அந்த ஹாஸ்பிட்டல மாத்திர கொடுத்து அனுப்பிட்டாங்க. சரியான சிகிச்சையே இல்ல. அலட்சியம் காட்றாங்க. இனிமே எந்தக் குழந்தைக்கும் இப்படி நடக்கக் கூடாது'' என்று முடித்தார்.