`நடிகர் ஒருவர் அ.தி.மு.க-வை தவறாக வழிநடத்த வாய்ப்பு!' - கே.சி.பழனிச்சாமி அதிர்ச்சித் தகவல் | popular actor can misled to admk says kc palanisami

வெளியிடப்பட்ட நேரம்: 21:55 (31/10/2018)

கடைசி தொடர்பு:21:59 (31/10/2018)

`நடிகர் ஒருவர் அ.தி.மு.க-வை தவறாக வழிநடத்த வாய்ப்பு!' - கே.சி.பழனிச்சாமி அதிர்ச்சித் தகவல்

கே சி பழனிசாமி

'தேசிய கட்சியோ, ஒரு நடிகரோ இந்தக் கட்சியைத் தவறாக வழிநடத்த வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க பலமான கட்சி. அதைச் சீரழிக்கின்ற முயற்சியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் ஈடுபட்டுள்ளனர் என்று கோவையில் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்'

அ.தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி கோவையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, "வெற்றிவேல் தொடர்ந்த வழக்கில் தங்களால் முடிவெடுக்க முடியவில்லை எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. இதனால் நடக்க இருக்கும் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் கூட்டணிக்கு இரட்டை இலை சின்னம் வழங்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தல் ஆணையம் இன்று வழங்கிய உத்தரவு தெளிவற்ற நிலையில் இருக்கிறது. டெல்லி உயர் நீதிமன்றத்தில் இரு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் ஆகிய இருவருடைய கையெழுத்துக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கக் கூடாது என டெல்லி உயர் நீதிமன்றத்தில் முறையிட இருக்கிறேன். தற்போது அ.தி.மு.க-வில் ஈபி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்ஸுடன்  இருக்கும் 5000 பேர் மட்டுமே திருப்தியாக இருக்கின்றனர். லட்சக்கணக்கான தொண்டர்கள் ஒருவர்கூட திருப்தியாக இல்லை. இங்கு கட்சி ஆட்சியை நடத்தவில்லை. ஆட்சிதான்  கட்சியை நடத்துகிறது. கிளை அளவில் உள்ள செயலாளர்களும், தொண்டர்களும் இப்போது பொறுப்பில் இருப்பவர்களை ஏற்கவில்லை. 

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் எனத் தான் கேட்கவில்லை.  கட்சியின் 'பை-லா' திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கட்சியை பலகீனப்படுத்தும் செயலில் இப்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். இவர்கள் மீதான வழக்குகளைக் காரணம் காட்டி, கட்சியைப் பலவீனப்படுத்த முடியும் என்பதால் இதை எதிர்க்கிறேன். ரஜினி ஒரு அணியாகவும் தி.மு.க ஒரு அணியாகவும் போட்டி எனச் சொல்வதை ஏற்க முடியாது. தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் மட்டுமே தனித் தனி அணிகளாகப் போட்டிக் களத்தில் இருக்கும். தற்போது கட்சிக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பதவி பறிபோன 18 எம்.எல்.ஏ-க்களை இன்னமும் அ.தி.மு.க-வில் இருந்து நீக்கவில்லை. அவர்களைக் கட்சிக்கு வாருங்கள் என  ஈபிஎஸ்ஸும் ஓ.பி.எஸ்ஸும் அழைப்பது என்பது காமெடியாக இருக்கிறது" என்றவர், நான் இப்போதும் அ.தி.மு.க காரன்தான். தேர்தல் வைத்து முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச்செயலாளர் மட்டுமே எனக்குத் தலைவர். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் சசிகலா, ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் என யார் தேர்ந்தெடுக்கப்பட்டாலும்  அவர்களைத் தலைவராக ஏற்கத் தயார். ஆனால், கட்சியின் பை-லா'வை மாற்றிய செயல்பாடு கட்சியைப் பலவீனப்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

கட்சியில் 5 ஆண்டுகள் உறுப்பினராக இருப்பவர் மட்டுமே பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிட முடியும். தினகரனுக்கு பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடத் தகுதியில்லை. தேசிய கட்சியோ, ஒரு நடிகரோ இந்தக் கட்சியைத் தவறாக வழிநடத்த வாய்ப்பு இருக்கிறது. அ.தி.மு.க பலமான கட்சி. அதைச் சீரழிக்கின்ற முயற்சியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர்செல்வமும் ஈடுபட்டுள்ளனர். ஏதோ ஒரு அழுத்தத்தில் தேர்தல் ஆணையம் செயல்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இருக்கின்றன" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க