வெளியிடப்பட்ட நேரம்: 22:35 (31/10/2018)

கடைசி தொடர்பு:22:48 (31/10/2018)

ஆவடியில் பன்றிக்காய்ச்சலால் ஒருவர் பலி - தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாஃபா பாண்டியராஜன் உறுதி!

ஆவடியைச் சேர்ந்த விஜய் என்பவர் பன்றிக்காய்ச்சலால் இன்று உயிரிழந்தார். பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டமன்ற உறுப்பினர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
 

நாதூராம்

சென்னையை அடுத்த ஆவடி சாந்தி நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் விஜய் (24). இவர் தமிழ்நாடு காவல் துறையில் 13-வது பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வந்தார். இவர் மனைவி பெயர் நர்மதா. இவர்களுக்குத் திருமணமாகி 6 மாதங்களே ஆன நிலையில், கடந்த ஒருவாரமாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார். காய்ச்சலின் தீவிரம் காரணமாக மேல் சிகிச்சைகாக கடந்த திங்கள்கிழமை அன்று போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின்போது அவருக்கு பன்றிகாய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10.41 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்பு  திருநின்றவூர் பகுதியைச் சேர்ந்த நாதுராம் என்பவர் பன்றிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார். ஆவடி பகுதியில் இந்த வாரத்தில் மட்டுமே இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும், ஆவடி நகராட்சி ஊழியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஆவடி பகுதிகளில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. அதே போல கழிவுநீர் கால்வாய்கள் மூடப்படாமல் திறந்தவெளியில் இருக்கின்றன. பல வீடுகளிலும் அடுக்குமாடி குடியிருப்புப் பகுதிகளில் கொசு மருந்தும் அடிப்பதில்லை. இது குறித்து ஆவடி தொகுதி  எம்.எல்.ஏ-வும் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன், ``டெங்கு மற்றும் பன்றிக்காய்ச்சலைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என உறுதியளித்துள்ளார்.