வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (31/10/2018)

கடைசி தொடர்பு:23:00 (31/10/2018)

ராசிபுரம் பகுதியில் பரவி வரும் மர்மக்காய்ச்சலால் குழந்தைகள் அவதி!

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ராசிபுரம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், பட்டணம், பாலப்பாளையம் உள்ளிட்டப் பகுதிகளில் பரவி வரும் மர்மக் காய்ச்சலால் அப்பகுதியைச் சேர்ந்த பள்ளிக் குழந்தைகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும், பட்டணம் பகுதியில் மட்டும் பத்து குழந்தைகள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதுதொடர்பாகப் பட்டணத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் நம்மிடம் கூறுகையில், "பட்டணம் பேரூராட்சி, 7-வது வார்டு, பரமேஸ்வரன் நகரில் 200 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் திடீரென ஏற்பட்ட மர்மக் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். அந்தப் பகுதியில் இருக்கும் சாக்கடையின் காரணமாகவே காய்ச்சல் பரவுகிறது என்று பகுதி மக்கள் கருதுகிறோம். பேரூராட்சி நிர்வாகத்திடம் இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பேரூராட்சி செயல் அலுவலரிடம் இதுபற்றி கேட்டதால், ஒரேயொரு முறை மட்டும் சாக்கடையைச் சுத்தம் செய்தனர். ஆனால், அது போதாது. சாக்கடையை முழுமையாகத்  தூர்வார வேண்டும்" என்றார்.

இந்நிலையில் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மக்கள், ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்தவண்ணம் இருக்கின்றனர். ஆனால், இங்கு போதிய மருத்துவர்களோ, மருந்தாளுநர்களோ இல்லை என்பது இப்பகுதி மக்களின் குற்றச்சாட்டு. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த சோலைமுத்து என்பவர் கூறுகையில், "காலை 6 மணியிலிருந்து மருத்துவமனையில் வெளி நோயாளிகள் வரிசையில் நிற்கின்றனர். முதியர்வர்கள் வெகு நேரம் நிற்க முடியாமல் மயக்கம் போட்டுவிழுகின்றனர்" என்றார். 

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மர்மக் காய்ச்சலால் அவதிப்படும் குழந்தைகளை 10 நாள்கள் வைத்திருந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலையே உள்ளது. என்ன காய்ச்சல்  என மருத்துவர்கள் கூற மறுப்பதாகப் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மருத்துவ முகாமோ, விழிப்பு உணர்வு முகாமோ நடத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.