வெளியிடப்பட்ட நேரம்: 23:45 (31/10/2018)

கடைசி தொடர்பு:07:21 (01/11/2018)

`இடைத்தேர்தலில் நிற்கப் போகிறோம்' - கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி!

``வரும் இடைத்தேர்தல் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. இருப்பினும் பொதுமக்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கவே இடைத்தேர்தலில் போட்டியிட இருக்கிறோம்" என்று கரூரில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.

 

கரூர் - கோவை ரோட்டில் உள்ள தனியார் அரங்கில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளரும், தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளருமான செ.நல்லசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``வரும் 2019 நாடாளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, ஒரு தேர்தல் அறிக்கை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரும் ஜனவரி மாதம் வெளியிடப்பட இருக்கிறது. அந்த தேர்தல் அறிக்கையை ஒவ்வொரு கட்சி அலுவலகத்துக்கும் அனுப்பி வைக்கப்படும். நடைபெற உள்ள இடைத்தேர்தல் நியாயமாக நடக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. பொதுவாக எல்லா கட்சியினரும் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்துப் பழக்கப்படுத்தி அவர்களைப் பாழ்ப்படுத்திவிட்டனர். ஜனநாயகம் பணநாயகமாக மாறிவிட்டதால், இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டுமென்றுதான் தேர்தலில் நிற்கப் போகிறோம். 

மேலும், அனைவரின் முகத்திரையைக் கிழிக்க வேண்டுமென்பதுதான் எங்களுடைய நோக்கம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மற்றும் இதர கட்சிகள் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லா கட்சிகளும் பணம் கொடுத்து ஓட்டு வாங்குவதையே குறிக்கோளாக வைத்துள்ளனர்" என்றார். அப்போது குறுக்கிட்ட பத்திரிகையாளர்கள், ``தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியினால்தான் மழைபெய்கிறது என்று அமைச்சர்கள் கூறி வருகிறார்களே?" என்று கேட்டனர். அதற்குப் பதிலளித்த நல்லசாமி, ``ராசி ஒன்றும் கிடையாது, பூனைக் கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விடும் என்பது போலத்தான் இந்தக் கதை. இன்று இரும்பு மனிதர் சர்தார் வல்லபபாய் பட்டேல் சிலை திறந்திருக்கிறார்கள். அவர் நல்லவர். ஒரு சிறந்த மனிதர். அவரது சிலைக்கு கீழே தமிழ் எழுத்துகள் பிழையோடு இருப்பதற்குக் கண்டனம் கடுமையாக தெரிவித்துக்கொள்கிறேன். தவறு இழைத்த அவர்களைக் கண்டிப்பதோடு தண்டிக்கவும் செய்ய  வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.