வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:07:39 (01/11/2018)

ராமநாதபுரத்தில் எரிவாயுக் குழாய் சேதத்தினால் ஊருணியில் நீர் குமிழ்கள் - அச்சத்தில் கிராம மக்கள்

கிராமத்தினர் பயன்படுத்தி வரும் ஊருணியில் எரிவாயு கசிவினால் நீர்குமிழ்கள் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த வழுதூர் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

எரிவாயு கசிவால் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

ராமநாதபுரம் அருகே வழுதூர் கிராமத்தில் பெரியபட்டினம் விலக்கு சாலையில் உள்ள இந்திய எரிவாயுக்கழகத்துக்குச் சொந்தமான எரிவாயு உற்பத்தி நிலையம் உள்ளது. இங்கு எடுக்கப்படும் எரிவாயுவை பூமியில் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலம் வழுதூரில் உள்ள தமிழக மின்வாரியத்துக்குச் சொந்தமான  எரிவாயு மின் உற்பத்தி நிலையத்துக்கு அனுப்பி வருகிறது. இதேபோல் தனியாருக்குச் சொந்தமான எரிவாயு நிறுவனங்களும் இப்பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு எடுக்கப்படும் எரிவாயுவைக் கொண்டு செல்வதற்கென மண்ணில் குழாய்கள் பதிக்கப்பட்டு பல ஆண்டுகளாகி விட்ட நிலையில் இக்குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்து, அவற்றில் இருந்து எரிவாயு வெளியாகி வருகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் பலமுறை எரிவாயு கழகத்தில் புகார் செய்தும் இது குறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட வில்லை.

இந்த நிலையில், வழுதூர்  கிராமத்தில் உள்ள ஊருணியின் அடியில் செல்லும் குழாய் சேதம் அடைந்து அதன் வழியாக எரிவாயு கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊருணியில் இருந்து நீர் குமிழ்கள் ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட அக்கிராம மக்கள்  அதிர்ச்சியடைந்தனர். திடீரென ஊருணி நடுவே எரிவாயுக்குழாய் உடைந்து  நீர் குமிழ்கள் ஏற்பட்டதால் அச்சம் அடைந்த அப்பகுதி மக்கள் பெரியபட்டினம் விலக்கு சாலையில் திடீரென சாலை மறியல் செய்தனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது.

இந்தச் சாலை மறியல் குறித்து தகவலறிந்த ராமநாதபுரம் டி.எஸ்.பி நடராஜன் சம்பவ இடத்துக்குச் சென்று இந்திய எரிவாயுக் கழக அதிகாரிகள் மூலமாக விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். மேலும், சேதமடைந்த எரிவாயு குழாய்கள் யாருக்குச் சொந்தமானவை என்பது குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழுதூர் கிராம மக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.