வெளியிடப்பட்ட நேரம்: 03:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:08:01 (01/11/2018)

``நான் கொடுத்த பெயர் பட்டியல் இல்லை...!” - நியமன ஆணை வழங்கும் விழாவை புறக்கணித்த அமைச்சர்?

தான் கொடுத்த பெயர் பட்டியல் இல்லாததால் அங்கன்வாடி பணிநியமன உத்தரவு வழங்கும் அரசு விழாவை புறக்கணித்தார் அமைச்சர் பாஸ்கரன். இதனால் அங்கன்வாடி பணிக்கு உத்தரவு கடிதம் பெற அழைக்கப்பட்டவர்கள் அலைக்கழிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் படுத்து உறங்கிய அவலமான காட்சியைப் பார்க்க முடிந்தது.

சிவகங்கை மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்களில் 36 பிரதான மைய பொறுப்பாளர், 319 குறுமைய பொறுப்பாளர், 367 உதவியாளர்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 2 ஆண்டாக நேர்காணல் முடிந்தும் பணி நியமன வழங்கப்படாமல் இழுபறி நீடித்தது. ஆளும்கட்சியினர் தலையீட்டால் பணி நியமனம் தள்ளிப்போனதாக சொல்லப்பட்டது. 

இந்த நிலையில், ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் ஆய்வு செய்து நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊட்டச்சத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதுமிருந்து விண்ணப்பித்த பெண்கள் 700-க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர். இதில் சரிபார்ப்பு பணி முடிந்து தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா அமைச்சர் ஜி.பாஸ்கரன் தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பணியாளர் தேர்வில் ஆளும்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி நியமன ஆணை வழங்கும் விழா ரத்தானது. இதனால் சரிபார்ப்பு பணிக்கு வந்திருந்த பெண்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

முந்தைய கலெக்டர் லதா அங்கன்வாடி பணியாளர் நியமனத்தில் அமைச்சருக்கு ஒத்துப்போகவில்லை. ஆனால், அவர் போகும்போது ஆளும் கட்சியினருக்குத் தெரியாமலேயே பணி நியமன ஆணையில் கையெழுத்திட்டதாக சொல்லப்படுகிறது. அதனால் வேறு வழியில்லாமல் தற்போதைய ஆட்சியர் ஜெயகாந்தன் அங்கன்வாடி பணியாளர்  பணி நியமன ஆணை வழங்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்தார். அமைச்சர் கொடுத்த பட்டியல் அதில் இடம் பெறாததால் அப்செட்டான அமைச்சர் அந்த விழாவை ரத்து செய்யச் சொல்லி பயனாளிகளை அப்செட்டாக்கினார். இந்தச் சம்பவம் குறித்து சத்துணவுப் பணியாளர்கள் மாநில நிர்வாகிகள் முதலமைச்சரை சந்திக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க