வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:08:09 (01/11/2018)

வெப்பத்தால் அழியும் `மை’! - நாகையில் சிக்கிய நூதன மணல் மோசடி கும்பல்

கொள்ளிடம் பகுதியில் நூதன முறையில் அரசை ஏமாற்றி மணல் விற்பனை செய்த ஏழு லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக 10 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகையில் கைது செய்யப்பட்ட மணல் மோசடி கும்பல்

நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் அரசின் சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையின் அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் பல தனியார் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அரசு மணல் குவாரிகள் இல்லாத நிலையில், இந்த மணல் குவாரிகளில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி பிறமாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலத்துக்கும் லாரிகள் மூலம் மணல் கொண்டு செல்லப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகிறது. 

இவ்வாறு கொண்டு செல்லப்படும் மணல் லோடுகளின் எண்ணிக்கை அரசுக்குத் தெரியாமல் இருக்க ஒரே அனுமதிச் சீட்டில் பல லோடு மணலை பல்வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். அதற்காக குவாரி நடத்துபவர்கள் நூதன முறையில் வெப்பத்தினால் அழியக்கூடிய மையைக் கொண்டு அனுமதிச் சீட்டில் எழுதிக்கொடுப்பதாகவும், நாள் முழுவதும் எத்தனை முறை மணல் விற்பனை செய்தாலும் அனுமதிச்சீட்டில் உள்ள எழுத்தை தீயில் சூடுகாட்டி அழித்து விட்டு அடுத்த இடத்தின் பெயரை எழுதிக்கொள்வதாகவும், இந்த நூதன மோசடியால் அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது. 

இதுகுறித்து விசாரிக்க எஸ்.பி விஜயக்குமார் உத்தரவிட்டார். அதையடுத்து விசாரணை நடந்து வந்த நிலையில் கொள்ளிடம் போலீஸார் இன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேட்டங்குடி மற்றும் ஆலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் சவுடு மண் குவாரிகளில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரிகளை நிறுத்திச் சோதனையிட்டதில் அனுமதிச் சீட்டுகளும், அதில் அழியக்கூடிய வகையில் எழுதப்பட்டிருப்பதும், சூடுக்காட்டினால் அழியக்கூடிய மை நிரப்பப்பட்ட பேனாக்கள் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பேனா மற்றும் அதைப் பயன்படுத்தி மணல் ஏற்றிவந்த ஏழு லாரிகளையும் பறிமுதல் செய்த போலீஸார் நூதன மோசடி மூலம் மணல் திருட்டில் ஈடுபட்ட கீரப்பாளையம் மதிமாறன், காத்திருப்பு அன்பரசன், மாதானம் ராமையன், விழுப்புரம் முருகன், அய்யாதுரை, சீனு, மணிகண்டன், சிதம்பரம் ராமலிங்கம், புவனகிரி அன்பரசன், லோகநாதன் ஆகிய 10 பேரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.