வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:07:38 (01/11/2018)

வேலை நிறுத்தம் எப்போது? - போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முடிவு

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தைப் பற்றி வரும் நவம்பர் 2-ம் தேதி அறிவிப்போம் எனத் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு, தொழிலாளர்களின் ஓய்வூதிய வைப்பு நிதியை அரசு எடுத்து செலவு செய்ததைத் திரும்ப செலுத்த வேண்டியும் போராட்டங்கள் நடத்தினார்கள். அதன் பிறகு அரசின் சார்பில் நடந்த பேச்சு வார்த்தையால்  போராட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தொ.மு.ச,  சி.ஐ.டி.யு உள்ளிட்ட 12 தொழிற்சங்கங்கள் தீபாவளிக்கு முன்பாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிப்பை வெளியிட்டிருந்தனர்.

தொழிலாளர் சங்கம் பேச்சுவார்த்தை

பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் தொழிலாளர்கள் நலத்துறை துணை ஆணையர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தொழிலாளர்கள் நிலுவைத் தொகை, அகவிலைப்படி மற்றும் தீபாவளி முன்பணம் ஆகியவற்றை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படாததால் தோல்வியில் முடிந்தது. தீபாவளியை முன்னிட்டு அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவெடுத்துள்ள நிலையில். தொழிற்சங்க நிர்வாகிகள், அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்காததால்  வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகவும்,  வேலை நிறுத்தப் போராட்டம் எப்போது தொடங்கும் என்பது தொடர்பாக நவம்பர் 2 -ம் தேதி (நாளை) முடிவெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் உடனடியாக வேலை நிறுத்த முடிவை எடுத்தால் தீபாவளிக்கு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகளை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் அபாயமும் உள்ளது.