வெளியிடப்பட்ட நேரம்: 09:15 (01/11/2018)

கடைசி தொடர்பு:09:48 (01/11/2018)

‘வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு ’- மய்யத்தில் இருந்து விலகிய ராஜசேகரனின் புதிய அமைப்பு!

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்திலிருந்து முதன்முதலில் வெளியேறிய உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகரன் ‘வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

ராஜசேகரன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினர்களில் முக்கியமானவராக இருந்தவர் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜசேகரன். பின்னர், சில கருத்து வேறுபாடுகள் காரணமாக மக்கள் நீதி மய்யத்திலிருந்து விலகியதாக அறிவித்தார். மக்கள் நீதி மய்யத்துக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் மாணவர் அணித் தலைவர், இளைஞர் அணிச் செயலாளர் உள்ளிட்ட பல  பொறுப்புகளில் இருந்தார். பின்னர், பி.ஜே.பிக்கும் ஆதரவு அளித்துள்ளார். இவர் தற்போது ‘வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளார்.

அமைப்பு குறித்து சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ``தமிழகத்தில் இன்று அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக ஜெயலலிதா மற்றும் கலைஞரின் மறைவுக்குப் பிறகு நிறைய பேர் நிறைய கட்சிகள் தொடங்குகின்றனர். நாங்கள்தான் அடுத்த முதலமைச்சர் என்கின்றனர். யாரும் மக்களுக்கு சேவை செய்யத் தயாராக இல்லை. எல்லோரும் வருகின்றபோது காலங்காலமாக சொல்லுகின்ற கதைகளைத்தான் மீண்டும் சொல்கிறார்கள். அரசியல்வாதிகள் எல்லோரும் சுயநலத்துடன் இருக்கின்ற வேளையில் பொதுநலம் கருதி இந்த அமைப்பைத் தொடங்கியுள்ளோம்.

முன்னாள் அமைச்சர்கள், ஐ.பி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் எனப் பலரும் எங்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளனர். `வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு' என்பது முழுவதுமாகவே அரசியல் கட்சியல்ல. என்.ஜி.ஓவும் அல்ல. மக்களின் மனநிலையைப் புரிந்துகொண்டு மக்களுக்காகப் பேசுவதுதான் எங்களுடைய கொள்கை. மக்கள் யாரையெல்லாம் எதிர்க்கிறார்களோ அவர்களுக்கு நாங்களும் எதிரிதான். டெங்குவை ஒழிக்க மட்டும் வருடத்துக்கு100 கோடி ஒதுக்குகிறார்கள். ஆனால், இன்றும் டெங்குவால் பலர் இறந்துகொண்டுதான் இருக்கின்றனர். இது சிறிய எடுத்துக்காட்டுதான். இப்படி எல்லாவற்றிலும் நடக்கும் ஊழலை குறிப்பிட முடியும். இனியும் ஊழல் கூட்டணிகளை தேர்ந்தெடுத்தால் தமிழ்நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது. 

தமிழ்நாட்டில் 80 விழுக்காட்டினர் படித்தவர்கள். ஆனால், ஆட்சியில் இருப்பவர்கள் நான்காவதும் ஐந்தாவதும் படித்தவர்கள்தான். இந்த நிலை மாற வேண்டும். `வாய்ஸ் ஆஃப் தமிழ்நாடு' தமிழ்நாட்டுக்கு ஒரு அலாரத்தைப் போன்று செயல்படும். அந்த அலாரத்தைக் கேட்டு விழிப்பவர்கள் விழிக்கலாம். அலாரத்தை அணைத்துவிட்டுத் தூங்குபவர்கள் தூங்கலாம். விரைவில் ‘VOT’ என்கிற செயலியைக் கொண்டுவர உள்ளோம். அதன் வழியாக எங்களால் முடிந்த தகவல்களை திரட்டி ஊழல்களை வெளிக்கொண்டுவருவோம். இந்த செயலியில் அரசியல்வாதிகளைப் பற்றிய முழுதகவல்களும் இருக்கும். இதை வைத்து நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்” என்று பேசினார்.