வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (01/11/2018)

கடைசி தொடர்பு:12:20 (01/11/2018)

தமிழ்நாடு டு இத்தாலிக்கு ஏற்றுமதியாகும் வாழைப்பழம்! அப்படி என்ன ஸ்பெஷல்?

முதல்முறையாக தமிழ்நாட்டில் இருந்து கன்டெய்னர் மூலம் 21 டன், கிராண்ட் நைன் (Grand nine) வாழைப்பழம் இத்தாலிக்கு ஏற்றுமதி ஆகிறது. வாழைப்பழங்கள் ஏற்றப்பட்ட இந்த கன்டெய்னர் இன்று (1.11.18) கொச்சி துறைமுகத்திலிருந்து புறப்பட்டு இத்தாலியின் ட்ரிஸ்டீ துறைமுகத்தை 24 தினங்களில் சென்றடைகிறது. நேற்று வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, வேளாண்துறைச் செயலாளர் ககன்தீப் சிங் பேடி மற்றும் ஐ.சி.ஏ.ஆர் (ICAR) துணை இயக்குநர் ஏ.கே.சிங் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

வாழை

இந்த வாழைப்பழங்கள் தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழகத்தின் தேனி - கூடலூர் பகுதியில் விளைந்தது. கொள்கலனுக்குள் 13 டிகிரி வெப்ப நிலையில் 40 நாள்கள் வரை பழங்கள் பழுக்காமல் இருக்கும். இறக்குமதி செய்த பின்னரே பழங்கள் பழுக்கும். இதற்காக முன்னரே 400 கிலோ மாதிரி சரக்கு இத்தாலியின் யுடைன் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப்பட்டது. அதைப் பரிசோதித்த வல்லுநர்கள் பழங்களின் வைப்புத் திறனை (Shelf life) கண்டு ஏற்றுமதிக்கு ஒப்புக்கொண்டனர். பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இவ்வாறு கொள்கலன் மூலம் ஏற்றுமதி செய்கின்றனர். இவ்வாறு ஏற்றுமதிக்காக வளர்க்கப்படும் வாழைப் பழங்களை 15 வாரங்களுக்குப் பதிலாக 10-11 வாரங்களிலே அறுவடை செய்ய வேண்டும் என்கின்றனர். 20 கிலோ பழங்கள் 8.2 டாலர் என்ற கணக்கில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த ஏற்றுமதிக்குச் சுவையும் ஒரு காரணம்.

மேலும், வரும் காலங்களில் பாரம்பர்ய ரகங்களான செவ்வாழை, பூவன், கற்பூர வள்ளி மற்றும் நேந்திரன் போன்ற ரகங்களும் ஏற்றுமதி செய்ய உள்ளதாகக் கூறினர். தமிழ்நாட்டில் வாழை சாகுபடி 96,000 ஹெக்டேர் பரப்பளவில் இருந்து 36 லட்ச டன் வாழைப் பழம் உற்பத்தி ஆகிறது. ஆகவே, இதுபோன்று ஏற்றுமதி செய்தால் விவசாயிகளுக்கு ஒரு கிலோவுக்கு 3-5 ரூபாய் வரை அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறினர்.