வெளியிடப்பட்ட நேரம்: 11:57 (01/11/2018)

கடைசி தொடர்பு:12:05 (01/11/2018)

` பணம் கொடுத்துப் பதவி வாங்கிவிட்டார்கள்!'  - ஸ்டாலினிடம் குமுறிய புலவர் இந்திரகுமாரி

` இந்த இரண்டு பேருக்கும் பதவி கொடுப்பதைப் பற்றி என்னுடைய கவனத்துக்கே வரவில்லை. கயல் தினகரனைத் தவிர மற்ற இருவரும் பணம் கொடுத்துப் பதவி வாங்கியிருக்கிறார்கள். இதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை' எனக் குமுறியிருக்கிறார் புலவர் இந்திரகுமாரி.

` பணம் கொடுத்துப் பதவி வாங்கிவிட்டார்கள்!'  - ஸ்டாலினிடம் குமுறிய புலவர் இந்திரகுமாரி

டகிழக்குப் பருவமழை அறிவிப்பைவிட, அறிவாலயத்தில் அனல் கிளப்பிக் கொண்டிருக்கிறது புதிய பதவிகள் நிரப்பப்பட்ட விவகாரம். ` இலக்கிய அணியின் மாநிலச் செயலாளருக்குத் தெரியாமலேயே இரண்டு மாநிலப் பதவிகளுக்குப் புதியவர்களைக் கொண்டு வந்துவிட்டார்கள். இதுதொடர்பாக ஸ்டாலினிடம் வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார் புலவர் இந்திரகுமாரி' என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். 

தி.மு.க இலக்கிய அணியின் மாநில பொருளாளர், இணைச் செயலாளர், புரவலர் ஆகிய மூன்று பதவிகளுக்கு ஆள்களை நியமித்து அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது அறிவாலயம். இந்த மூன்று பதவிகளில் சந்திரபாபு, கயல் தினகரன், திருச்சி செந்தில் ஆகிய மூவர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பதவிகளை நிரப்புவது குறித்து இலக்கிய அணியின் மாநிலச் செயலாளரான புலவர் இந்திரகுமாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டவில்லை. இதன்பிறகு நடந்தவற்றை நம்மிடம் விவரித்த தி.மு.க முன்னணி நிர்வாகி ஒருவர், `` இலக்கிய அணி சார்பாக நடக்கும் பல கூட்டங்களை, தன்னுடைய சொந்த செலவில் நடத்தி வருகிறார் புலவர் இந்திரகுமாரி. அண்மையில் திருத்துறைப்பூண்டியில் கருணாநிதிக்குப் புகழஞ்சலி நிகழ்வையும் நடத்திக் காட்டினார். கழகத்தில் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். அவரையே சோதனைக்குள்ளாக்கும் வகையில் அறிவாலய நிர்வாகிகள் செயல்பட்டுவிட்டனர்" என்றவர், 

`` ஓரிரு நாள்களுக்கு முன்பு கழக இலக்கிய அணிக்குப் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். இதில், கயல் தினகரன் என்பவர் கழகத்தின் சீனியர். இலக்கிய அணியின் பொருளாளராக இருந்தார். இவரை இந்தப் பதவியில் இருந்து நீக்கிவிட்டு, சந்திரபாபுவைக் கொண்டு வந்துள்ளனர். தினகரனுக்கு கழக இலக்கிய அணியின் மாநில இணைச் செயலாளர் பதவியைக் கொடுத்துள்ளனர். இதில், சந்திரபாபு, செந்தில் ஆகிய இருவருக்கும் எப்படிப் பதவி கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை. சமூகரீதியான அமைப்பு ஒன்றில் இருந்துவிட்டு தி.மு.கவுக்குள் வந்தவர் சந்திரபாபு. அதேபோல், புத்தகம் வெளியிடுவது, நிர்வாகிகளைப் பார்ப்பது என அறிவாலயத்துக்குள் அண்மைக்காலமாக தென்பட்டு வருகிறார் திருச்சி செந்தில். இவர்களுக்குத் திடீரென பதவி வழங்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்துவிட்டார் புலவர். இதற்கு யார் காரணம் என்பதை அறிந்துகொள்ள தலைவர் ஸ்டாலினை நேரடியாக சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில்,  `இந்த இரண்டு பேருக்கும் பதவி கொடுப்பதைப் பற்றி என்னுடைய கவனத்துக்கே வரவில்லை. கயல் தினகரனைத் தவிர மற்ற இருவரும் பணம் கொடுத்துப் பதவி வாங்கியிருக்கிறார்கள். இதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை' எனக் குமுறியிருக்கிறார். 

அண்ணா அறிவாலயம்

இதற்குப் பதில் கொடுத்த ஸ்டாலின், ` பேராசிரியர் கையெழுத்துப் போட்டு அனுப்பியிருந்தார். அதனால் அந்தப் பதவிகளை நிரப்பிவிட்டோம்' எனக் கூறியிருக்கிறார். இதன்பின்னர், துரைமுருகனிடமும் புகார் கூறியிருக்கிறார் புலவர். அவரும், ` இந்த இரண்டு பேரும் எப்படி வந்தாங்கன்னு தெரியலையே' என ஆதங்கப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக விரிவான ஆய்வு ஒன்றையும் நடத்தினார் புலவர் இந்திரகுமாரி. அதில், இந்த இருவருக்கும் பதவி கிடைப்பதற்குக் காரணம், ஆர்.எஸ்.பாரதியின் உதவியாளரும் கருணாநிதியின் உதவியாளராக இருந்தவருமான நித்யாவின் தம்பி பாக்கியராஜும் ஈரோடு இறைவன் ஆகிய இருவரும்தான் என்பதைக் கண்டறிந்தார். அந்த இரண்டு பேரையும் அழைத்துக் கொண்டு போய் பேராசிரியர் அன்பழகன் முன்னால் நிறுத்திக் கையெழுத்து வாங்கிவிட்டனர். இந்த உத்தரவை அறிவாலய மேலாளர் ஜெயக்குமாரிடம் கொடுத்து வெளியிட வைத்துவிட்டனர். இந்தப் பதவிகளுக்காக தலா 5 லட்ச ரூபாய் பரிமாறியிருப்பதையும் கட்சி நிர்வாகிகள் கண்டறிந்துள்ளனர். ஓர் அணியின் மாநிலச் செயலாளருக்குத் தெரியாமலேயே மாநிலப் பதவிகளை நியமித்திருப்பதை புலவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கழகத்தில் தன்னந்தனியாக அமர்ந்து ஆய்வு நடத்தி சீரமைப்புப் பணிகளைத் துரிதப்படுத்தி வருகிறார் ஸ்டாலின். இந்த ஆய்வின்போது, அறிவாலயத்தின் மீதே பல மாவட்டங்களின் நிர்வாகிகள் புகார் தெரிவித்திருந்தனர். இலக்கிய அணி விவகாரத்தில் அது மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது" என்றார் ஆதங்கத்துடன். 

இலக்கிய அணி நிர்வாகிகள் சர்ச்சை தொடர்பாக, புலவர் இந்திரகுமாரியிடம் பேசினோம். `` என்னைப் பொறுத்தமட்டில் எந்த வேதனையையும் நான் ஸ்டாலினிடம் தெரிவிக்கவில்லை. கழகத்தின் பொதுச் செயலாளராக பேராசிரியர் இருக்கிறார். ஸ்டாலின்தான் இயக்கத்தின் தலைவர். அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இருக்கிறது. அவர்களுடைய அனுமதியோடுதான் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இலக்கிய அணிக்கு நிர்வாகிகளை நியமித்ததில் எந்தவித சர்ச்சையும் இல்லை. அவர்கள் யாரை நியமித்தாலும் சர்ச்சை வராது. அந்த அணியை நன்றாக வழிநடத்துவது மட்டும்தான் என்னுடைய பொறுப்பு. எனக்குத் தெரிவித்துவிட்டுத்தான் அந்த அறிவிப்பை வெளியிட்டனர். எந்த அணியில் யாருக்குப் பதவி போடப்பட்டாலும், அந்த அணியின் செயலாளருக்குத் தெரியப்படுத்தச் சொல்வார் ஸ்டாலின். பொதுவாக, நான் எந்தவித சர்ச்சைக்குள்ளும் போவது கிடையாது. தலைவருக்கு லாயலாக இருக்க வேண்டும் என்பதைத் தவிர, எனக்கு வேறு எந்தச் சிந்தனையும் இல்லை" என்றதோடு முடித்துக்கொண்டார்.