ஜெ. உடல்நிலை! - ஜனாதிபதிக்கு வித்யாசாகர் ராவ் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன? | i saw jayalalitha Vidyasagar Rao wrote letter to indian president

வெளியிடப்பட்ட நேரம்: 12:56 (01/11/2018)

கடைசி தொடர்பு:12:56 (01/11/2018)

ஜெ. உடல்நிலை! - ஜனாதிபதிக்கு வித்யாசாகர் ராவ் எழுதிய கடிதத்தில் இருப்பது என்ன?

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரின் உடல்நிலை தொடர்பாக முன்னாள் தமிழக ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

ஜெயலலிதா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016-ம் வருடம் செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து 75 நாள்கள் மருத்துவமனையில் இருந்த அவர் டிசம்பர் 5-ம் தேதி உயிரிழந்தார். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் அவரின் உடல்நலம் பற்றி விசாரிக்க வந்த அரசியல் தலைவர்கள் யாருக்கும் ஜெயலலிதாவை நேரில் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. அவர் இறந்த பிறகு அவரின் மரணத்தில் மர்மம் இருந்ததாக கூறப்பட்ட நிலையில் இதைப் பற்றி விசாரிக்க முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்தது தமிழக அரசு. ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதா வீட்டில் வேலை செய்தவர்கள், உதவியாளர்கள், அப்போலோ மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், அரசு செயலாளர்கள் எனப் பலரும் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.

இதையடுத்து, சில தினங்களுக்கு முன்பு ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் ராஜ்பவனுக்கு சில கேள்விகள் அடங்கிய கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் ‘1) ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து எத்தனை அறிக்கை ஆளுநர் மாளிகைக்கு வந்தது? 2) சிகிச்சைகள் தொடர்பாக முறைப்படியான தகவல் தெரிவிக்கப்பட்டதா? 3) ஆளுநர் ஜெயலலிதாவைப் பார்த்துவிட்டு சென்றபோது அவரின் உடல்நிலை பற்றி குடியரசுத் தலைவர் மாளிகைக்குத் தெரிவிக்கப்பட்டதா? 4) எய்ம்ஸ் மற்றும் ராஜ்பவன் இடையே கடிதத் தொடர்பு இருந்ததா? 5) விசாரணை ஆணையத்தில் நீங்கள் தெரிவிக்க விரும்பும் விஷயங்களைக் கூறலாம்’ என்ற கடிதம் ஆணையத்திலிருந்து ராஜ் பவனுக்கு அனுப்பப்பட்டது. 

இதற்குப் பதிலளிக்கும் வகையில் தற்போது ராஜ்பவனில் இருந்து இரண்டு கடிதங்கள் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கடிதம் வித்யாசாகர் ராவ், ஜெயலலிதாவின் சிகிச்சை மற்றும் உடல்நிலை குறித்து அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு எழுதிய கடிதத்தின் நகலும் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது அந்தக் கடிதத்தின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. 

முன்னாள் ஆளுநர் வித்யாசாகர் ராவ் அனுப்பிய கடிதத்தில், ``2016 செப்டம்பர் 22-ம் தேதி காய்ச்சல் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து செப்டம்பர் 25-ம் தேதி முதல் மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. செப்டம்பர் 26 முதல் 30-ம் தேதி வரை உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு மருத்துவமனை வளாகம் அமைதியற்ற நிலையில் இருந்தது. மேலும், அவர் உடல்நிலை தொடர்பான வதந்திகள் சமூகவலைதளங்களில் வெளியானது. அதைச் சரிசெய்து சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்கும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. 

நான் அக்டோபர் 1-ம் தேதி சென்னைக்கு வந்தேன். வந்த உடனேயே அப்போலோ மருத்துவமனை சென்றேன். அங்கே மருத்துவமனை தலைவரிடம் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி கேட்டறிந்தேன். ஜெயலலிதாவுக்கு அவரது அறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. நான் பார்த்தபோது அவர் உணர்ச்சியற்ற நிலையில் இருந்தார். அவரை முழுமையாகக் கண்காணிக்குமாறு மருத்துவர்களிடம் வலியுறுத்தினேன். நான் மருத்துவமனைக்கு வந்து சென்ற பிறகு ஒரு மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் ஜெயலலிதா சுய நினைவுடன் நலமாக உள்ளார். அவருக்கு மேலும் ஓய்வு தேவைப்படுகிறது. அதுவரை மருத்துவமனையில் இருப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சென்னை வந்தார்கள். இதையடுத்து நான் தொடர்ந்து சென்னையிலேயே இருந்து அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வந்தேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.