வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (01/11/2018)

கடைசி தொடர்பு:13:25 (01/11/2018)

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சசிகலா புஷ்பா திடீர் தர்ணா!

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெறுவதாக இருந்த மத்திய அரசு திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்த கண்காணிப்புக் குழு கூட்டம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் கூட்டத்தில் பங்கேற்க வந்த மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நுழைவு வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சசிகலா புஷ்பா திடீர் தர்ணா

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசுத் திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்த கண்காணிப்புக் குழு கூட்டம்  தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதி எம்.பி. ஜெயசிங் தியாகராய நட்டர்ஜி தலைமையில் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. திடீரென கூட்டம் ரத்து செய்யப்படுவதாக இன்று காலை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா டெல்லியிலிருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் மனு அளிக்க தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் வந்தனர்.

கூட்டம் ரத்து செய்யப்பட்ட தகவல் அறிந்ததும், மாவட்ட ஆட்சியர் மத்திய அரசைப் புறக்கணிப்பதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு சசிகலா புஷ்பா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லியிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தேன். ஆனால், கூட்ட அரங்கில் ஆட்சியர், அதிகாரிகள் யாரும் இல்லை. வெறிச்சோடிக் காணப்பட்டது. அலுவலகத்தில் ஆட்சியரும் இல்லை. மாவட்ட ஊரக முகமை இயக்குநர் கூட்டம் ரத்து செய்யப்பட்டதாக கூறுகிறார்.

கூட்டத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும். இதற்கு என்ன காரணம். கூட்டம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் என்ன. தூத்துக்குடியில் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகிறது. இதுகுறித்து கேள்வி எழுப்பி விடுவேன் என பயந்து போயி மாவட்ட ஆட்சியர் ஒழிந்து கொண்டாரா" என ஆவேசமாகப் பேசி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

அரசு ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா

கூட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து எம்.பி.ஜெயசிங் தியாகராய நட்டர்ஜி கேட்டபோது, எனக்கு உடல்நிலை சரியில்லாததால் கூட்டத்தை ரத்து செய்தேன் என்றும் கூட்டம் நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

ஆட்சியர் குறித்து தரக்குறைவாகப் பேசியதாக சசிகலா புஷ்பாவைக் கண்டித்தும், சசிகலா புஷ்பா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் அரசு ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க