வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:14:30 (01/11/2018)

மீண்டும் சூடுபிடிக்கும் சிலைக்கடத்தல் விவகாரம் - அறநிலையத்துறையை எச்சரிக்கும் நீதிமன்றம்!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் ஆவணங்கள் மாற்றப்பட்டிருந்தால், அறநிலையத்துறை கடுமையான விளைவைச் சந்திக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கைவிடுத்திருக்கிறது. 

சிலைக் கடத்தல் விவகாரம்  நீதிமன்றத்தில்

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் இருந்த புன்னைவன நாதர் சிலை கடந்த 2004-ம் ஆண்டு நடைபெற்ற திருப்பணியின்போது மாற்றப்பட்டிருக்கலாம் என ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சிலைக்கடத்தல் தொடர்பான சிறப்பு அமர்வு, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளை இந்தச் சிலை விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டனர். சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளும் கோயிலில் விசாரணை மேற்கொண்டனர். ``முதலில் இருந்த புன்னை வன நாதர் சிலையில் உள்ள மயில் வாயில் பூ இருக்கும், தற்போது இருக்கும் சிலையில் நாகம் இருக்கிறது'' என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். 

இந்நிலையில், மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, புன்னைவனநாதர் சிலை மாற்றப்பட்டது குறித்து ஆவணங்கள் அழிக்கப்பட்டிருப்பதாக வழக்கறிஞர் தரப்பு தெரிவித்தது. இதைக்கேட்ட நீதிபதிகள் `ஆவணங்கள் அழிக்கப்பட்டது உண்மையானால், தமிழக இந்து சமய அறநிலையத்துறை கடுமையான விளைவுகளைச் சந்திக்கும்' என்று எச்சரித்துள்ளனர்.