வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (01/11/2018)

கடைசி தொடர்பு:15:00 (01/11/2018)

பிறப்பு, இறப்பு அரசாணையால் குழப்பம்! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பிறப்பு, இறப்பு பதிவு தொடர்பான 2 அரசாணைகளை ரத்து செய்யக் கோரிய வழக்கில் சுகாதாரத்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 மதுரை உயர்நீதிமன்றம் கிளை

டைட்டஸ் ஆதிநாதன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், ``நகராட்சிகளின்  முக்கியமான பணியாக பிறப்பு, இறப்புகளைப் பதிவு செய்வது. பொதுமக்களின் ஆரோக்கியத்தை ஆவணப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை சட்ட விதிகளின்படி கையாண்டுவருகிறது. இதை நகராட்சி மற்றும் நகரப்பஞ்சாயத்து ஆகிய உள்ளூர் அமைப்புகள் பராமரித்து முறையாகப் பதிவுகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், பிறப்பு, இறப்பு பதிவுகளை மேற்கொள்வது தொடர்பாக 2017-ல் அரசாணை எண் 353-ம், 2018 செப்டம்பரில் அரசாணை எண் 443-ம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியை இரண்டாகப் பிரித்து, ஒரு பகுதியில் நகராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளரும், சுகாதாரத்துறை சார்பில் சுகாதார ஆய்வாளர்களும் பிறப்பு, இறப்பு பதிவுகளை மேற்கொள்வர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் முதன்மைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நவம்பர் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ஓர் எல்லைக்குள் இரு பகுதிகளாக பதிவு நடைபெறுவது தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், தகவல்களைத் தவறாகப் பதிவு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் துல்லியமான புள்ளி விவரங்களைப் பெறுவது என்பதும், சுகாதாரத்தை அளவிடுவது என்பதும் இயலாததாகி விடும். ஆகவே பிறப்பு, இறப்பு பதிவு தொடர்பான 2 அரசாணைகளையும் ரத்து செய்யவும், அதுவரை அவற்றை செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும்'' எனக் கோரியிருந்தார்.