வெளியிடப்பட்ட நேரம்: 14:41 (01/11/2018)

கடைசி தொடர்பு:15:46 (01/11/2018)

``தொலைச்சுருவேன்" - போலீஸ்காரரை மிரட்டும் நீலகிரி எம்.பி கோபாலகிருஷ்ணன்!

நீலகிரி தொகுதி எம்.பி கோபாலகிருஷ்ணன், ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் ஒருவரை மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

கோபாலகிருஷ்ணன்

நீலகிரி தொகுதி எம்.பி-யாக இருப்பவர் கோபாலகிருஷ்ணன். குன்னூர், ஓட்டுப்பட்டறைப் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன், எம்.பியான பிறகு, டெல்லி, குன்னூர் என்று தொடர்ந்து ரவுண்டிங்கில் இருந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு குன்னூர் பேருந்து நிலையம் அருகே கோபாலகிருஷ்ணனின் கார் சென்றுள்ளது. அப்போது, அங்கு ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் ஒருவர் எதேச்சையாக, கோபாலகிருஷ்ணனின் காரை நிறுத்தியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், ``எதுக்கு நீங்க பேட்ரோலிங்கா இருக்கீங்க. கூப்டுங்க.. டி.எஸ்.பி., எஸ்.பியை. கரெக்டா வேலைய பார்க்கணும். தொலைச்சுருவேன். எல்லாரும் மாதிரி நான் இல்ல. தொலைச்சு போட்டு போய்ட்டே இருப்பேன். ஜாக்கிரதையா இருக்கணும்" என்று சொல்லிவிட்டு காரில் ஏறிக் கிளம்பி விடுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியிருக்கும் நிலையில், எம்.பி.கோபாலகிருஷ்ணன் மதுபோதையில்தான் போலீஸை மிரட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தபோது, ``நீலகிரி முழுவதும் தற்போது கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால், வாகனங்கள் சரியாக தெரியாது. சம்பவத்தின்போது, ஹைவே பேட்ரோல், சோதனைக்காக எம்.பி கோபாலகிருஷ்ணன் வந்த காரை நிறுத்திவிட்டனர். ஆனால், பனிப்பொழிவு காரணமாக அது கோபாலகிருஷ்ணனின் கார் என்று தெரியவில்லை” என்றனர்.

இதுதொடர்பாக எம்.பி கோபாலகிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசியபோது, ``அப்படி எல்லாம் இல்ல. அதெல்லாம் பொய். எங்க பசங்களுக்குள்ள நாங்க சும்மா பேசிக்கிட்டு இருப்போம். நானே, டாக்டர் ட்ரீட்மென்ட்ல இருக்கேன்” என்றார்.