வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (01/11/2018)

கடைசி தொடர்பு:14:50 (01/11/2018)

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு நீதிமன்ற தடை!

30 சதவிகித போனஸ் வழங்கக்கோரி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்திருந்த வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

108

தீபாவளியை முன்னிட்டு 30 சதவிகித போனஸ் வழங்கவேண்டுமென 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்காக 5-ம் தேதி இரவு முதல் 6-ம் தேதி வரை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். அவர்களின் இந்த அறிவிப்புக்கு எதிராக செல்வராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். 

அந்த மனு இன்று நீதிபதிகளின் முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அத்தியாவசிய சேவைகள் சட்டத்தின் கீழ் ஆம்புலன்ஸ் சேவை வருவதால் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கின் விசாரணையை வரும் 8-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

இந்தத் தடை குறித்து 108 ஆம்புலன்ஸ் சேவை மண்டல மேலாளர் பிரபுதாஸ் பேசும்போது,

`` எல்லா வருடமும் போல் இந்த வருடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 6,300 ரூபாய் ஊக்கத்தொகை கொடுப்பதாக முடிவெடுத்துள்ளோம். ஊழியர்கள் அதைவிட அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். லாபம் ஈட்டக்கூடிய அமைப்பில்தான் போனஸ் எதிர்பார்க்க முடியும். 108 ஆம்புலன்ஸ் என்பது ஒரு சேவைப் பணி. அதனால்தான் தீபாவளி ஊக்கத்தொகையாக அரசு வழங்குகிறது. இன்று மதியமும் உதவி ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. சுமுகமான தீர்வை எட்டிவிடுவோம் என்றே நம்புகிறோம்`` என்கிறார் அவர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க