வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:09:42 (06/11/2018)

`ஆன் லைனில் பார்ப்போம்; ஆப்பு வைப்போம்!'- குடும்பமாக ஏமாற்றும் கில்லாடிகள் 

சென்னை வடபழனி போலீஸாரிடம் சிக்கிய தாய், மகன்களிடம் விசாரணை நடத்தியபோது, `திருமணத்துக்கு ஆன் லைனில் வரன் தேடும் ஆண்களை குறிவைத்து ஏமாற்றுவோம்' என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

கைதானவர்கள்

சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்தவர் காளிசரண். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றுகிறார். 42 வயதாகும் இவருக்குப் பெண் தேடும் படலம் நீண்ட காலமாக நடந்துவருகிறது. தன்னுடைய முழு விவரங்கள், ஜாதகம் ஆகியவற்றை தனியார் திருமண இணையதளத்தில் பதிவு செய்திருந்தார் காளிசரண். இந்தச் சூழ்நிலையில் காளிசரணுக்கு ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய பெண், `உங்களின் ஜாதகம், முழுத் தகவல்களை எல்லாம் பார்த்தோம். உங்களின் புகைப்படத்தையும் பார்த்தோம். மணப்பெண்ணுக்குப் பிடித்துள்ளது. இதனால் உங்களை நேரில் சந்தித்து மற்றவற்றைப் பேசலாம். எனவே, நீங்கள் வடபழனி 100 அடி சாலையில் உள்ள ஹோட்டலுக்குச் சரியாக மாலை 6 மணிக்கு வந்துவிடுங்கள்' என்று காளிசரணிடம் போனில் கூறியுள்ளார். இதனால் மணப்பெண்ணைப் பார்க்கும் ஆவலில் அங்கு சென்றுள்ளார். அப்போது, அன்போடு வரவேற்று உபசரித்த பெண் மற்றும் இரண்டு ஆண்கள் திடீரென காளிசரணைத் தாக்கினர். பிறகு அவரிடமிருந்து ஐ போன், நகைகள் ஆகியவற்றைப் பறித்துவிட்டு அந்தக் கும்பல் தப்பி ஓடியது. இதுகுறித்து காளிசரண் வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம், இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீஸார் விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த ஹோட்டலுக்குச் சென்ற போலீஸார் விசாரணை நடத்தினர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகள், செல்போன் நம்பர் ஆகியவற்றைக் கொண்டு விசாரித்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``காளிசரண் தெரிவித்த தகவலின்படி அவரைத் தாக்கிய பெண் உட்பட மூன்று பேரைத் தேடினோம். முதலில் காளிசரணிடம் பேசிய செல்போன் நம்பரைக் கொண்டு அவர்களின் விவரங்களை அறிந்தோம். தொடர்ந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது காளிசரண், தன்னிடம் பேசிய பெண், மலையாளம் கலந்த தமிழில் பேசினார் என்று தெரிவித்தார். இதனால் காளிசரணைத் தாக்கி செல்போன், நகைகளைப் பறித்தது கேரளாவைச் சேர்ந்த கும்பல் என்று தெரியவந்தது. இதனால் திருமண வரன் என்ற போர்வையில் ஏமாற்றும் கும்பல் குறித்த தகவல்களைச் சேகரித்தோம். அப்போது கோவையில் இதுபோன்று ஒரு சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. இதனால், அவர்கள் குறித்த விவரங்களை சேகரித்தோம். அந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதும் காளிசரணிடம் கைவரிசையைக் காட்டியவர்களும் ஒரே கும்பல் என்று எங்களுக்குத் தெரிந்தது. இதனால், அவர்களைப் பிடிக்க வியூகம் அமைத்தோம். சம்பந்தப்பட்ட கும்பலிடம் அவர்கள் பாணியிலேயே வரன் பார்க்க வருகிறோம் என்று கூறினோம். நாங்கள் கூறியதை அவர்களும் நம்பி சென்னை வந்தனர். அப்போது அவர்களைப் பிடித்தோம்" என்றனர்.

இதுகுறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ``கேரளா, கொச்சியைச் சேர்ந்த சாவித்திரி மற்றும் அவரின் மகன் சிவா, சாவித்திரியின் தங்கை மகன் கோகுலகிருஷ்ணன் ஆகிய 3 பேர்தான் காளிசரணை ஏமாற்றி நகைகள், செல்போனைப் பறித்துச் சென்றுள்ளனர். சாவித்திரிதான் காளிசரணிடம் போனில் பேசியுள்ளார். தாய், மகன்கள் என 3 பேரும் சேர்ந்துதான் காளிசரணைப் போல பலரை ஏமாற்றியுள்ளதாக எங்களுக்குத் தெரியவந்துள்ளது. கைதான 3 பேரிடம் விசாரித்தபோது தனியார் திருமணத் தகவல் இணையதளங்களில் மணப்பெண் தேவை என்று பதிவு செய்தவர்களின் விவரங்களை சேகரிப்போம். பிறகு அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ளோம். பேசும்போதே அவர்கள் குறித்த முழுவிவரங்களை சேகரித்துவிடுவோம். பெரும்பாலும் நீண்ட காலமாக திருமணமாகாத வாலிபர்களை குறி வைத்து ஏமாற்றுவோம். எங்களால் ஏமாற்றப்பட்டவர்களில் பலர் புகார் கொடுப்பதில்லை. இதனால் தொடர்ந்து பலரை ஏமாற்றிவந்துள்ளோம். ஆன் லைனில் பார்த்து விவரங்களைச் சேகரித்து ஏமாற்றுவதே எங்களின் வேலை என்று கூறியுள்ளனர். இதனால் இவர்கள் 3 பேரைத் தவிர மற்றவர்கள் யாருக்கும் இந்தச் சம்பவத்தில் தொடர்பு உள்ளதா என்று விசாரித்துவருகிறோம்" என்றார்.


காளிசரண், மணப்பெண்ணைப் பார்க்க ஆசையாக ஹோட்டலுக்குச் சென்றபோது, அங்கு இருந்த சாவித்திரி, நான்தான் மணப்பெண்ணின் அம்மா, நீங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள், சொந்த வீடு இருக்கிறதா, உங்களின் பூர்வீகம் எது என்று எல்லாவற்றையும் விசாரித்துள்ளார். அவர்களின் பேச்சை நம்பிய காளிசரணும் முழுவிவரங்களைத் தெரிவித்துள்ளார். அதன்பிறகுதான் சிவாவும் கோகுலகிருஷ்ணனும் சேர்ந்து காளிசரணைத் தாக்கியுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் குடும்பமாக இவர்கள் பலரை ஏமாற்றியுள்ள தகவல் போலீஸாருக்குக் கிடைத்துள்ளது. இதனால் இவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலை போலீஸார் சேகரித்துவருகின்றனர். கோவையில் நடந்த சம்பவம் குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தினர். பெண் பார்க்கவரும் சிலரை மணப்பெண் கோலத்திலும் இந்தக் கும்பல் ஏமாற்றியுள்ளதாக தெரிகிறது. இதனால் மணப்பெண்ணாக நடித்தது யார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.