பீரோ சந்து, குப்பைத் தொட்டி, காவி உடை... செங்கல்பட்டு லஞ்ச ரெய்டின் அமளி! | vigilance raid to chengalpattu sub registrar office

வெளியிடப்பட்ட நேரம்: 18:53 (01/11/2018)

கடைசி தொடர்பு:18:53 (01/11/2018)

பீரோ சந்து, குப்பைத் தொட்டி, காவி உடை... செங்கல்பட்டு லஞ்ச ரெய்டின் அமளி!

காவி வேட்டியில் உலவியவர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் என்பதைக் கண்டுகொண்ட பதிவுத்துறை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒத்துழைப்பு கொடுக்காத சார்பதிவாளர் அலுவலக ஊழியர் சிலருக்குப் பளார் விழுந்ததும் அவர்கள் அமைதியானார்கள். சசிகலா ஆதரவாளர் என்பதால் 10 மணிநேரமாக நடந்த சோதனையில் கடைசிவரை அந்த அதிகாரி ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

பீரோ சந்து, குப்பைத் தொட்டி, காவி உடை... செங்கல்பட்டு லஞ்ச ரெய்டின் அமளி!

செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகம் நேற்று பரபரப்புடன் காணப்பட்டது. அதற்குக் காரணம், 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தியதுதான். விடிய விடிய நடந்த இந்த ரெய்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் பதிவுத்துறை ஊழியர்கள் தாக்கப்பட்டார்கள். இருதரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் நடந்ததால் இரவு முழுவதும் பரபரப்பாக இருந்தது.

செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகம்

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டுப் பகுதியில் அமைந்துள்ளது, ஒருங்கிணைந்த சார்பதிவாளர் அலுவலகம். தமிழகத்தில் ரியல் எஸ்டேட் தொழில் சுணக்கமானபோதும், செங்கல்பட்டுப் பகுதியில் இன்னும் அதன் தாக்கம் குறையவில்லை. பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள், மத்திய அரசின் மருத்துவப் பூங்கா என அடுத்தடுத்து தொழில் நிறுவனங்கள் இந்தப் பகுதியில் அமைவதால், ரியல் எஸ்டேட் தொழில் ஏறுமுகமாகவே இருக்கிறது. தீபாவளிக்கு அரசு அலுவலகங்களில் அதிக அளவு லஞ்சம் கொடுக்கும் வழக்கம் சமீபகாலமாக இருந்துவருகிறது. இதனால் தீபாவளியை முன்னிட்டு லஞ்ச ஒழிப்புத் துறையினரும் அரசு அலுவலகங்களைக் கண்காணித்து வந்தனர். நேற்று முகூர்த்த தினம் என்பதால் செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டம் நிறைந்திருந்தது. 

செந்தூர்பாண்டி, சார்பதிவாளர்

காலையிலிருந்தே ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் ஸ்வீட் பாக்ஸுகளுடன் அங்கிருந்த ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கிக் கொண்டிருந்தார்கள். நெருக்கமான அலுவலர்களுக்கு ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்பவர்களின் `கவனிப்பு’ பலமாக இருந்தது. காலை 10 மணிக்கே லஞ்ச ஒழிப்புத் துறையினர் சிலர் காவி வேட்டி கட்டிக்கொண்டு அலுவலகத்தில் நடப்பவற்றை நோட்டமிட்டுக் கொண்டிருந்தனர். அங்கு நடப்பவற்றை உயர் அதிகாரிகளுக்கு ரகசியமாகத் தகவல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஜரூரான வசூல் வேட்டையில் பதிவுத் துறையினர், லஞ்ச ஒழிப்புத் துறையினரைக் கண்டுகொள்ளவில்லை. ஊழியர்கள் பணம் வாங்குவதை எல்லாம் செல்போனில் பதிவு செய்துகொண்டிருந்தார்கள். மாலை 5 மணிக்குப் பத்திரப்பதிவு செய்வதற்காக வெளியில் நின்றுகொண்டிருந்தவர்களிடம், ``பதிவாளர் வீட்டுக்குக் கிளம்பப்போறார். பணம் கொடுப்பவர்கள் எல்லாம் சீக்கிரம் கொடுத்துவிடுங்க’’ எனப் பத்திரப்பதிவு ஊழியர்கள்போல சிக்னல் காட்டினார்கள். இதனால் கையில் பணம் வைத்திருந்தவர்கள் உள்ளே சென்றனர். அடுத்த சில நிமிடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி சங்கர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த அலுவலகத்தில் நுழைந்தனர். அடுத்த நிமிடமே வாயில் கதவு இழுத்து மூடப்பட்டது.

செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகம்

காவி வேட்டியில் உலவியவர்கள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் என்பதைக் கண்டுகொண்ட பதிவுத்துறை ஊழியர்கள்  அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து சார்பதிவாளர் அலுவலகம் உள்ளே நுழைந்த அதிகாரிகள், சார்பதிவாளர் செந்தூர்பாண்டியிடம் சோதனையைத் தொடங்கினார்கள். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடந்தது. கோபமடைந்த சார்பதிவாளர் செந்தூர்பாண்டி, ``ஒரு பெரிய தொகை கொடுத்துதான் செங்கல்பட்டு அலுவலகத்துக்கு டிரான்ஸ்ஃபர் வாங்கி வந்துள்ளேன்’’ என மிரட்டல் தொனியில் தெரிவித்தாராம். இதனால் கொதிப்படைந்த அந்த அதிகாரி செந்தூர்பாண்டியின் சட்டையைப் பிடித்துவிட்டாராம். இதனிடையே ஒத்துழைப்பு கொடுக்காத இரண்டு பத்திரப்பதிவு ஊழியர்களுக்கு, லஞ்ச ஒழிப்புத் துறையினர் பளார் விட்டிருக்கிறார்களாம். சிலர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை பீரோ சந்து, குப்பைத்தொட்டி என ஆங்காங்கே கொட்டிவிட்டார்கள். அவற்றை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினார்கள். இதனால் இரவு முழுவதும் சார்பதிவாளர் அலுவலகம் பரபரப்பாக இருந்தது.

இரவு 9 மணியைக் கடந்தும் பத்திரப்பதிவு செய்ய வந்தார்கள் உள்ளேயே காத்துக் கிடந்தார்கள். ஒருசிலரைத் தவிர, 10 மணிக்கு அனைவரும் வெளியேற்றப்பட்டார்கள். பிடிபட்ட சிலர், தாங்கள் கொண்டுவந்த பணத்துக்குக் கணக்கு வைத்திருக்காததால் நள்ளிரவு தாண்டியும் அங்கேயே உட்கார்ந்திருந்தார்கள். இரவு முழுவதும் சோதனை செய்ததில் கணக்கில் வராத பல லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. ஆனால், கைப்பற்றப்பட்ட பணத்துக்கு சார்பதிவாளர் கையெழுத்து போடவில்லை. இதைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே `நீண்ட பேச்சுவார்த்தை’ நடந்தது. 4 லட்ச ரூபாய்க்கும் மேல் கைப்பற்றி இருப்பதாகத் தகவல் வந்தது. ஆனால், அடுத்த சில மணிநேரத்தில் 2.98 லட்ச ரூபாய் மட்டுமே கைப்பற்றி இருப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்தனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை

இரவு ஒன்றரை மணிக்கு, ``உங்கள் காரைச் சோதனையிட வேண்டும்" எனச் செந்தூர்பாண்டியிடம் சொன்னதும், சார் பதிவாளர் அலுவலகத்துக்கு வெளியில் நிறுத்தப்பட்ட TN20 CL-7324 என்ற ஸ்விஃப்ட் காரைக் காண்பித்தார். அந்த கார் டிக்கியில் தனியார் நிறுவனங்களைச் சேர்ந்த பல கோடி மதிப்பிலான சொத்துகளின் பதியப்படாத 15 ஆவணங்கள் சிக்கின. மேலும், அந்த காரின் ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கேட்டபோது அவற்றை செந்தூர்பாண்டி கொடுக்க மறுத்துவிட்டார். மேலும், சார்பதிவாளர் அலுவலர்கள் சுகுமார், பாஸ்கர், சாரதி, குமார் உட்பட 7 பேரிடமும் அதிகாலை 3 மணியளவில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

"செந்தூர்பாண்டி சசிகலாவுக்கு நெருக்கமானவர் என்பதால், நள்ளிரவில் டி.டி.வி.தினகரனின் வழக்கறிஞர் முத்துக்குமார் சார்பதிவாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தார். டி.டி.வி.தினகரன் ஆதரவாளர் என்பதாலேயே இவர்மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஸ்கெட்ச் போட்டு சோதனை செய்துள்ளார்கள். இந்தச் சோதனை முழுக்க அரசியல் ஆதாயம் கொண்டது" என அங்கிருந்த டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

சுமார் 10 மணி நேரத்துக்கு மேல் சோதனை நடத்தப்பட்டு, அதிகாலை 3.20-க்குத்தான் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சார்பதிவாளர் அலுவலகத்தைவிட்டு வெளியேறினார்கள். ஆனால், எவ்வளவு பணம் கைப்பற்றி இருக்கிறோம் என அதிகாரிகள் வெளியில் சொல்லாததால், `லஞ்ச ஒழிப்புத் துறையினரும் தீபாவளி கொண்டாடத்தான் வந்தார்களா?!’ என வெளியில் ஆவலுடன் காத்திருந்தவர்கள் பேசிக்கொண்டார்கள். 

இதுகுறித்து செந்தூர்பாண்டி, ``சுமார் 10 மணிநேரம் நடந்த சோதனையில் 1 ரூபாய்கூட எங்கள் பணியாளர்களிடம் கைப்பற்றப்படவில்லை. கைப்பற்றியது எல்லாமே பொதுமக்கள் வைத்திருந்த பணம்தான். கைப்பற்றப்பட்ட பணத்துக்கு எங்களைக் கையெழுத்துப் போடச்சொல்லி வற்புறுத்தினார்கள். நாங்கள் கையெழுத்துப் போடவில்லை. எங்கள் துறைத் தலைவரைச் சந்தித்து இதுகுறித்து விளக்கம் அளிக்கவுள்ளோம்” என்கிறார்.

நிறைய பணம் வைத்திருந்தால் சிக்கித்தானே ஆக வேண்டும்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்