வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:17:30 (01/11/2018)

`சீக்கிரம் ஜெயிலுக்கு அனுப்புங்க' - பெண்ணால் 'ஷாக்'கான ஐ.பி.எஸ் அதிகாரி 

கடத்தப்பட்ட குழந்தை அஜய்யுடன்  போலீஸார்

குழந்தைக் கடத்தல் வழக்கில் சிக்கிய ஜோதி என்ற பெண்ணிடம்  ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் விசாரித்தபோது, `எவ்வளவு நேரம்தான் விசாரிப்பீங்க, சீக்கிரமாக ஜெயிலுக்கு அனுப்புங்க. வழக்கை வக்கீல் மூலம் பார்த்துக்கொள்கிறேன்' என்று அசால்ட்டாக அந்தப்பெண் சொல்ல ஆடிப்போய் உள்ளனர் போலீஸார். 

சென்னை, புளியந்தோப்பு, போகிபாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். மீன்மார்க்கெட்டில் கூலிவேலை செய்துவருகிறார். இவரின் மனைவி துர்காதேவி. இவர்களுக்கு அஜய் என்ற 3 வயதில் மகனும் தீபிகா என்ற 6 மாதக்குழந்தையும் உள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் அஜய் படித்துவருகிறார். சில தினங்களுக்கு முன், பள்ளிக்குச் சென்ற அஜய் வீடு திரும்பவில்லை. அவரை  வியாசர்பாடியைச் சேர்ந்த குட்டியம்மாள், அவரின் மகள் ஐஸ்வர்யா ஆகியோர் கடத்தியதை சிசிடிவி கேமரா மூலம் புளியந்தோப்பு போலீஸார் கண்டுபிடித்தனர்.  துர்காதேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் 7 மணி நேரத்துக்குள் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி, துரிதமாகச் செயல்பட்டு அஜய்யை மீட்டார். அஜய்யை கடத்திய குட்டியம்மாள், ஐஸ்வர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களிடம் விசாரித்தபோது சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த ஜோதி என்பவர்தான் அஜய்யைக் கடத்தக் கூறினார் என்று தெரிவித்தனர். இதனால் ஜோதியை போலீஸார் தேடினர். நீண்ட தேடுதலுக்குப் பிறகு போலீஸார் அவரை இன்று கைது செய்தனர். அவர்தான் அஜய்யை கடத்த மாஸ்டர் பிளான் போட்டுக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஜோதியிடம் போலீஸார் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. 

 இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஓட்டேரியை சேர்ந்த ஜோதி, ரத்தம் கொடுக்க, கருமூட்டைகளை விற்க பெண்களை ஏற்பாடு செய்வது எங்களின் விசாரணையில் தெரியவந்தது. அந்த வகையில்தான் குட்டியம்மாள், ஐஸ்வர்யா ஆகியோர் ஜோதிக்கு அறிமுமாகியுள்ளனர். இந்தச் சமயத்தில் ஜோதியின் தங்கை தேவிக்கு நீண்ட காலமாகக் குழந்தையில்லை. இந்தத் தகவலை குட்டியம்மாளிடம் கூறியிருக்கிறார் ஜோதி. அப்போது, புளியந்தோப்பில் அஜய் என்ற 3 வயது குழந்தை குறித்த தகவலை குட்டியம்மாள் ஜோதியிடம் கூறியுள்ளார். அதன் பிறகு அஜய்யை கடத்த அவர்கள் திட்டமிட்டுள்ளனர். பள்ளி முடிவதற்குள் அஜய்யை கடத்தி உன் வீட்டுக்குக் கொண்டுவந்து இரவில் தன்னிடம் கொடுத்துவிடும்படி குட்டியம்மாளிடம் ஜோதி கூறியுள்ளார். அதன்படி குட்டியம்மாளும் அவரின் மகள் ஐஸ்வர்யாவும் அஜய்யை கடத்திவந்து வீட்டில் வைத்துள்ளனர். அஜய்யை கடத்த முதலில் 2 லட்சம் ரூபாய் பேரம் பேசியுள்ளனர். பிறகு, ஒரு லட்சத்துக்கு அஜய்யைக் கடத்த முடிவு செய்துள்ளனர். அட்வான்ஸாக எந்தத் தொகையையும் குட்டியம்மாளுக்கு ஜோதி கொடுக்கவில்லை. அஜய்யை கடத்திய நாளில் குட்டியம்மாளை 5 முறை போனில் தொடர்பு கொண்டுள்ளார் ஜோதி. அதற்கான ஆதாரத்தை நாங்கள் சேகரித்துள்ளோம். இதையடுத்து ஜோதியைக் கைது செய்துள்ளோம்'' என்றனர். 

ஜோதியால் ஷாக்கான ஐபிஎஸ் அதிகாரி 

ஐ.பி.எஸ் அதிகாரி ஒருவர் ஜோதியிடம் விசாரணை நடத்தியுள்ளார். அப்போது அவரிடம் `சார், எவ்வளவு நேரம் என்னை விசாரிப்பீங்க, சீக்கிரமாக ஜெயிலுக்கு அனுப்புங்கள். நான் வக்கீலை வைத்து வழக்கை பார்த்துக்கொள்கிறேன்' என்று அசால்ட்டாக ஜோதி கூறியுள்ளார். அதைக்கேட்ட ஐ.பி.எஸ் அதிகாரியும் சக போலீஸாரும் அதிர்ச்சியடைந்துள்ளார். ஜோதியின் மகன், வாட்டர் பிசினஸ் செய்துவருகிறார். ஓட்டேரி பகுதியில் ஏழ்மை நிலைமையில் இருக்கும் பெண்களை ரத்தம் கொடுக்க, கருமுட்டைகளை விற்க ஜோதி ஏற்பாடு செய்வதால் பல பெண்களின் நட்பு அவருக்கு உள்ளது. ஜோதியின் நெட்வொர்க் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கெனவே பிறந்த குழந்தையைக் குட்டியம்மாள் ஆஸ்பத்திரியில் கடத்த முயன்றார். குழந்தை கடத்தலை போலீஸார் மோப்பம் பிடித்ததால் கடத்தப்பட்ட குழந்தையை மருத்துவமனையில் மீண்டும் போட்டுவிட்டு குட்டியம்மாள் தப்பிவிட்டார். அந்தச் சம்பவத்தில் யார், யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்றும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். குட்டியம்மாளும் ஐஸ்வர்யாவும் கொடுத்த தகவலின் அடிப்படையில் சிக்கிய ஜோதி, உண்மையிலேயே தங்கை தேவிக்காகத்தான் அஜய்யை கடத்தினாரா என்ற கோணத்திலும் விசாரணை நடந்துவருகிறது. குழந்தை கடத்தியவர்களைப் பிடிக்க புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீஸார் இரண்டு நாள்கள் இரவு பகல் பாராமலும் தூங்காமலும் விசாரணை நடத்தியுள்ளனர். சிறப்பாகவும் துரிதமாகவும் பணியாற்றிய புளியந்தோப்பு போலீஸாரை உயரதிகாரி வெகுவாகப் பாராட்டினர்.