வெளியிடப்பட்ட நேரம்: 19:10 (01/11/2018)

கடைசி தொடர்பு:19:10 (01/11/2018)

`எனக்கு பாதுகாப்பு வேண்டும்!’ - பதறும் உதவிப் பேராசிரியர் முருகன்

``எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு இல்லை. எங்கள் பாதுகாப்பை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும்’’ என்று ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வந்த உதவிப் பேராசிரியர் முருகன் செய்தியாளர்களை பார்த்துக் கூறியது நிர்மலாதேவி வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நிர்மலாதேவி


அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிர்மலதேவியின் வாக்குமூலம், 6 மாதங்களுக்குப் பிறகு, ஊடகங்களில் வெளியாகி சூட்டைக் கிளப்பியுள்ள நிலையில், நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் நேற்றும் இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக வந்தனர். பத்திரிகைகளில் வெளிவரும் நிர்மலாதேவியின் வாக்குமூலம் அனைத்தும் பொய் என்று நேற்று வந்தபோது முருகன் தெரிவித்த நிலையில், இன்று, ``எனக்கும் என் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வேண்டும். அதை நீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும். நிர்மலாதேவியின் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளது பொய்'' என்றார்.

``மூளைச்சலவை செய்யப்பட நிர்மலாதேவி ஒன்றும் குழந்தை இல்லை. 50 வயதாகும் அவருக்கு நல்லது கெட்டது தெரியாதா'' என கருப்பசாமி தெரிவித்தார்.

`வாக்கு மூலத்தில் கூறியுள்ளது அனைத்தும் உண்மையா மேடம்’ என்று நிர்மலதேவியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கும், எந்தப் பதிலும் கூறாமல் முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டுப் போனார். தங்கள் வழக்கை ரகசியமாக நடத்தாமல், திறந்த நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அது சம்பந்தமாக எந்த உத்தரவும் பிறப்பிக்காத நீதிபதி, வரும் 3-ம் தேதி மூவரையும் ஆஜராக உத்தரவிட்டார்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க