வெளியிடப்பட்ட நேரம்: 18:31 (01/11/2018)

கடைசி தொடர்பு:18:31 (01/11/2018)

`நான்தான் மணமகளின் அம்மாவாகப் பேசுவேன்' - மோசடி ரேகா சாவித்திரி பகீர் வாக்குமூலம் 

ரேகா சாவித்திரி, சிவா, கோகுலகிருஷ்ணன்

முதலில் நான்தான் வரன் தேடுபவர்களிடம் பேசுவேன். என்னுடைய பேச்சில் ஏமாந்து நாங்கள் குறிப்பிடும் இடத்துக்குத் தனியாக வருபவர்களைத் தாக்கி நகை, பணம், செல்போன்களைப் பறிப்போம் என்று கைதான ரேகா சாவித்திரி போலீஸிடம் தெரிவித்துள்ளார். 

 சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த காளிசரண் என்பவரை கடந்த 23-ம் தேதி திருமண ஆசைக்காட்டி கேரளாவைச் சேர்ந்த ரேகா சாவித்திரி, அவரின் மகன்கள் சிவா, கோகுலகிருஷ்ணன் ஆகியோர் வரவழைத்தனர். பிறகு அவரிடமிருந்த செல்போன், நகைகள், ஏடிஎம் கார்டு, பணம் ஆகியவற்றைப் பறித்தனர். இதுகுறித்து காளிசரண் கொடுத்த புகாரின்பேரில் ரேகா சாவித்திரி, சிவா, கோகுலகிருஷ்ணன் ஆகியோரை இன்ஸ்பெக்டர் சந்துரு கைது செய்தார். இந்த வழக்கில் ரேகா சாவித்திரி, சிவா, கோகுல கிருஷ்ணன் குறித்து பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 போலீஸார் கூறுகையில், ``ரேகா சாவித்திரியின் தங்கை மகன் கோகுலகிருஷ்ணன். இவர்கள் இருவரும் சென்னையில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் இணையதளத்தில் மணமகள் தேவை என்று விளம்பரம் கொடுப்பவர்களை ஏமாற்றி வந்துள்ளனர். இவர்கள் மீது பள்ளிக்கரணை, கிண்டி, ஜாம்பஜார், அம்பத்தூர், கொரட்டூர், தாம்பரம் உட்பட 20 போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளன. ரேகா சாவித்திரி ஒரு முறையும் கோகுல கிருஷ்ணன் 3 முறையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 14.10.2018-ல் கோயம்புத்தூர் காட்டூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள முதியவரை இவர்கள் ஏமாற்றியுள்ளனர். அவரிடமிருந்து கார், லேப்டாப், பணம் ஆகியவற்றை இந்தக் கும்பல் பறித்துள்ளது. காளிசரணிடம் ரேகா சாவித்திரி, அவரின் மகன் சிவா என்கிற சதாசிவம், ரேகாவின் தங்கை மகன் கோகுலகிருஷ்ணன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கைவரிசை காட்டியுள்ளனர். 
அதன் பிறகு அவர்கள் எர்ணாகுளத்துக்குச் சென்று தலைமறைவாக இருந்தனர். தொடர்ந்து ரேகா சாவித்திரியும் கோகுலகிருஷ்ணனும் 31.10.2018-ல் சென்னை வந்துள்ளனர். வடபழனி பகுதியில் நடந்து சென்ற ஒருவரிடம் ரேகா சாவித்திரி பேச்சுக் கொடுத்துள்ளார். திடீரென தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக ரேகா சாவித்திரி மிரட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த கோகுல கிருஷ்ணன் அந்த நபரை மிரட்டி 3 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்றுள்ளார். அந்தப் புகாரின்பேரில் இருவரை கைது செய்தோம். காளிசரண் கொடுத்த புகாரில் மூன்று பேரையும் கைது செய்துள்ளோம" என்றனர். 

 ஆன் லைனில் எப்படி ஏமாற்றுவீர்கள் என்று கேட்டதற்கு `மணமகள் தேவை என்று இணையதளத்தில் விளம்பரம் செய்பவர்கள்தான் எங்களின் இலக்கு. மணமகள் தேவை என்று விளம்பரம் கொடுத்தவர்களிடம் ரேகா சாவித்திரி போனில் பேசுவார். அப்போது, அவர்களின் முழு விவரங்களை சேகரித்துக் கொள்வோம். மேலும், போனில் பேசியவரிடம் தனியாகப் பெண் பார்க்க வரும்படி சொல்வோம். அதை நம்பி வருபவர்களிடம் நகை, பணம், செல்போன் ஆகியவற்றைப் பறிப்போம். போலீஸிடம் புகார் கொடுத்தால் தன்னிடம் தவறாக நடந்ததாக ரேகா சாவித்திரி மிரட்டி அனுப்புவார். அதற்கு பயந்து பெரும்பாலானவர்கள் புகார் கொடுக்க மாட்டார்கள்' என்று தெரிவித்துள்ளனர். 

 கைதான சிவாவுக்கும் கோகுலகிருஷ்ணனுக்கும் திருமணமாகிவிட்டது. குடும்ப பாணியில் மணமகளைப் பார்க்க வரவழைத்து அவர்களிடமிருந்து நகை, பணம், செல்போன் ஆகியவற்றைப் பறிப்பதே இவர்களின் வேலையாக இருந்துள்ளது. இதற்காக வீட்டில் உள்ள பெண்களே மணப்பெண்ணாகவும் நடித்துள்ளதாகப் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. காளிசரணைத் தாக்கிய நகை, செல்போனை பறித்த இந்தக் கும்பல், அவரின் ஏடிஎம் கார்டை பறித்துள்ளது. அந்தக் கார்டு மூலம் ஏடிஎம்-மிலிருந்து பணத்தை எடுத்துள்ளனர். அந்த சிசிடிவிதான் இந்த வழக்கில் துப்பு துலக்க உதவியதாக இருந்ததாகப் போலீஸார் தெரிவித்தனர். துரிதமாகச் செயல்பட்டு மோசடி கும்பலைக் குடும்பமாகப் பிடித்த இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீஸாரை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டியுள்ளார்.