வெளியிடப்பட்ட நேரம்: 19:44 (01/11/2018)

கடைசி தொடர்பு:19:56 (01/11/2018)

ஷோபியா விவகாரம் - சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க விமான நிலையத்துக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆராய்ச்சி மாணவி ஷோபியாவின் கைது நடவடிக்கையில் மனித உரிமை மீறப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை செய்ய தூத்துக்குடி  விமான நிலையம் மற்றும் புதுக்கோட்டை காவல் நிலையத்தின் சிசிடிவி பதிவுக்காட்சிகளை ஒப்படைக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடைபெற்ற பா.ஜ.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக கடந்த செப்டம்பர் 3-ம் தேதி சென்னையிலிருந்து இண்டிகோ விமானத்தில் தூத்துக்குடிக்கு வந்தார். அதே விமானத்தில் கனடாவில் பிஹெச்.டி செய்து வரும் ஆராய்ச்சி மாணவி லூயிஸ் ஷோபியா அவரின் தந்தை அந்தோணிசாமி மற்றும் தாய் மனோகரி ஆகியோருடன் பயணம் செய்தார். விமானத்தில், ``பாசிச பா.ஜ.க ஒழிக... மோடி ஒழிக...” எனக் குரல் எழிப்பினாராம். தூத்துக்குடியில் விமானம் தரை இறங்கியதும், தமிழிசைக்கும் மாணவி ஷோபியாவுக்கும் வாக்குவாதம் முற்றியது. பின்னர், ஷோபியா மீது தமிழிசை விமான நிலைய அதிகாரி மற்றும் புதுக்கோட்டை காவல் நிலையத்திலும் புகார் மனு அளித்தார். 

இப்புகாரின் அடிப்படையில் ஷோபியா மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அவர் நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்கபட்டார். “தன் மகளைத் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக” தமிழிசை உட்பட பா.ஜ.க-வினர் 10 பேர் மீது புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார் அவரின் தந்தை. இச்சம்பவம் நடைபெற்று இரண்டு மாதம் ஆன நிலையிலும், வழக்கு பதிவு செய்யாத நிலையில், வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்தார். இதை, கடந்த 25-ம் தேதி விசாரணை செய்த தூத்துக்குடி ஜே.எம்-3 நீதிமன்ற நீதிபதி தமிழ்ச்செல்வி, தமிழிசை செளந்தரராஜன் மற்றும் பா.ஜ.க-வினர் மீது வழக்கு பதிவு செய்து அதன் விசாரணை அறிக்கையை வரும் நவம்பர் 20-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். 

இச்சம்பவம் குறித்தும், ஷோபியாவின் கைது நடவடிக்கையில் மனித உரிமை மீறப்பட்டதாகவும் மாநில மனித உரிமைகள் ஆணையத்திலும் ஷோபியாவின் தந்தை புகார் அளித்தார். அதன் அடிப்படையில் நெல்லையில் உள்ள அரசினர் சுற்றுலா மாளிகையில் கடந்த செப்டம்பர் 24-ம் தேதி ஷோபியாவின் தந்தை அந்தோணிசாமி மற்றும் ஷோபியா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இச் சம்பவம் நடைபெற்ற கடந்த செப்டம்பர் 3-ம் தேதி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு  இண்டிகோ விமானத்தில் (விமான எண்: 6E7185) வந்த பயணிகள் பட்டியல், அன்று காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை உள்ள சிசிடிவி பதிவுக்காட்சிகளை வரும் நவம்பர் 20-ம் தேதிக்குள் ஆணையத்திடம் ஒப்படைக்குமாறு தூத்துக்குடி விமான நிலைய இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

அதே போல, மாணவி ஷோபியாவை கைது செய்து விசாரணை செய்த புதுக்கோட்டை காவல் நிலையத்தின் கடந்த செப்டம்பர் 3-ம் தேதி பகல் 12 மணி முதல் இரவு 8 மணி வரை உள்ள சிசிடிவி பதிவுக்காட்சிகளையும் வரும் நவம்பர் 20-ம் தேதிக்குள் ஆணையத்திடம் ஒப்படைக்குமாறு புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க