வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:00:00 (02/11/2018)

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் ஐப்பசித் தேரோட்டம்!

கோவில்பட்டி அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயிலில் ஐப்பசித் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், பழைமைவாய்ந்த பிரசித்திபெற்ற அருள்மிகு ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. கோவில்பட்டி நகரின் நடுநாயகமாக அமைந்துள்ள இக்கோயில் பழைமை வாய்ந்தது. மதுரையில் மீனாட்சி அம்பாள் அரசாட்சி செய்வதுபோல இங்கும் அம்பாளின் அரசாட்சிதான் நடைபெற்று வருகிறது. இக்கோயிலில் வருடந்தோறும் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஐப்பசித் திருவிழாவும் ஒன்று. 

கடந்த 24-ம் தேதி இத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த நாள்களில் சுவாமி - அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 9-ம் நாள் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டம்

10-ம் நாள் திருவிழாவான நாளை நவம்பர் 2-ம் தேதி அம்பாள் ரிஷப வாகனத்தில் வீதியுலா வருதலும், 11-ம் நாள் திருவிழாவான  நவம்பர் 3-ம் தேதி மதியம் தபசுக் காட்சிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. அன்று மாலையில் ரிஷப வாகனத்தில் சுவாமி பூவனநாதராக அம்பாளுக்குக் காட்சி அளிக்கும் வைபவம் நடைபெறுகிறது.

12-ம் நாள் திருவிழாவான வரும் நவம்பர் 4-ம் தேதி காலையில் அம்பாள் பல்லக்கில் வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. பின்னர், சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் பட்டிணப் பிரவேசம் செல்லும் வைபவம் நடைபெறுகிறது. இத்துடன் திருவிழாவும் நிறைவுபெறுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க