வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (01/11/2018)

கடைசி தொடர்பு:23:30 (01/11/2018)

ஆர்.டி.ஓ அலுவலகத்தில் திடீர் ரெய்டு..! தெறித்து ஓடிய புரோக்கர்கள்

தஞ்சாவூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் இன்று திடீர் சோதனை நடத்தினர். போலீஸாரைக் கண்டதும் புரோக்கர்கள் பலர் அதிர்ச்சியடைந்து ஓடினர். இதில், பணம் உள்ளிட்ட ஆவணங்கள் ஏதும் சிக்கவில்லை என்றாலும், திடீரென நடத்தப்பட்ட சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது.

தஞ்சாவூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் டிரைவிங் லைசென்ஸ் வழங்குவதற்கு லஞ்சம்  கேட்பதாகத் தொடர் புகார்கள் வந்தன. மேலும், தீபாவளி நெருங்குவதை ஒட்டி தீபாவளிப் பரிசாக டிரைவிங் ஸ்கூல் வைத்திருப்பவர்கள் மற்றும் புரோக்கர்கள் ஆர்.டி.ஓ-வுக்கு லஞ்சம் கொடுத்துவருவதாக வந்த புகாரை அடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மண்டல ஆய்வுக் குழுவைச் சேர்ந்த தவச்செல்வம் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் மதியத்திற்கு மேல் ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு வந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

இதைக் கண்ட புரோக்கர்கள் பலரும் அதிர்ச்சியடைந்ததோடு, தெறித்து ஓடிவிட்டனர். இதையடுத்து, அலுவலகத்ததைப் பூட்டிவிட்டு, ஆர்.டி.ஓ கார்த்தியேகன்  உள்பட அலுவலர்கள் 12 பேரையும், 2 புரோக்கர்களையும் போலீஸார் சோதனைசெய்தனர். ஆர்.டி.ஓ-வின் கார், அறை ஆகிய பகுதிகளில் ஆய்வுசெய்தனர். பின்னர், அலுவலகத்தில் இருந்த 1 லட்சத்து 12 ஆயிரம் பணம் குறித்து கணக்குகள் கேட்டதோடு அதற்கான ஆவணங்கள் சரியாக இருக்கிறதா எனப் பார்த்தபோது ஆவணங்கள் சரியாக  இருந்தன.

 

இதையடுத்து, அங்கிருந்த புரோக்கர்கள் இருவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஹரிஹரன் என்ற புரோக்கரிடம்  8000 ரூபாய் பணம் இருந்தன. அவரிடம் விசாரித்தபோது தீபாவளி செலவுக்கு  வைத்திருப்பதாகக் கூறி விளக்கமளித்தார். இதையடுத்து,  சோதனையை  முடித்துக்கொண்ட போலீஸார், மாலைக்கு மேல் புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்துப் பேசிய சிலர், ``இந்தச் சோதனையில் பணம் உள்ளிட்ட ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை. திடீரென செய்யப்பட்ட ஆய்வால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டும் இதே போல தீபாவளிக்கு முன் சோதனை நடத்தப்பட்டது. 

அப்போது,  பெரும் தொகை  கைப்பற்றப்பட்டதோடு சிலர் கைதுசெய்யப்பட்டனர். அதேபோல, இந்த வருடமும் நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என உணர்ந்த அதிகாரிகள் எச்சரிக்கையாக இருந்தனர். இதனால் தப்பித்துக்கொண்டனர். ஆனால், தீபாவளிப் பரிசு என்கிற பெயரில் மறைமுகமாக ஆர்.டி.ஓ அலுவகத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பணம் கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'' என்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க