வெளியிடப்பட்ட நேரம்: 20:59 (01/11/2018)

கடைசி தொடர்பு:20:59 (01/11/2018)

பிரேக் இன்ஸ்பெக்டர் உயிரைப் பறித்த ரெய்டு - லஞ்ச ஒழிப்புத்துறையால் நேர்ந்த சோகம்!

கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் பாபு, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.

கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஆய்வாளர் பாபு, லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின்போது மாரடைப்பால் உயிரிழந்தார்.

பாபு

பாபு

ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்தவர் பாபு. இவர் கோவை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆய்வாளராகக் கடந்த மூன்று ஆண்டுகளாகப் பணிபுரிந்து வந்தார். இதனிடையே, ஆறு மாதத்துக்கு முன்பு, மத்திய வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு இடமாறுதலாகி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மதியம் 12.30 மணியளவில் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் வந்த 9 பேர் கொண்ட குழுவினர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

அப்போது, கணக்கில் வராத 75,510 ரூபாயும், அதே போல ஆய்வாளர் பாபு கையில் 8,160 ரூபாய் இருந்துள்ளது. அதை மதியம் 12.45 மணியளவில் பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து, வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரிடம் விசாரணை முடித்துவிட்டு, அறிக்கையைத் தயார் செய்யும் வேலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கிடையே, பாபுவுக்கு மாலை 4.15 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மயக்கமடைந்ததை அடுத்து, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், வரும் வழியிலேயே அவர் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவமனையின் நிர்வாகிகள் தெரிவித்தனர். 

``லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் செய்துள்ளனர். அதிக ரத்த அழுத்தம் ஏற்பட்டு, வாந்தி எடுத்தபோதும், லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடிப்பதாகக் கூறி  மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்தனர். பாபுவுக்கு ரத்தம் அழுத்தம் இருந்தும், அவருக்கு மதிய உணவு கொடுக்கவில்லை. அவர் நெஞ்சுவலி எனக் கூறியபோதும், முதலுதவி சிகிச்சை அளிக்காமல் நடிப்பதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அசால்ட்டாக விட்டுவிட்டனர்" என்று பாபுவின் உடன் இருந்தவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பாபுவுக்கு அகிலா என்ற மனைவி உள்ளார். இவர்களின் மகன் சென்னையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.