வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:02:00 (02/11/2018)

ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை!

ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் இன்று, 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இன்று மாலை நான்கு மணியில் இருந்து சோதனை நடந்து வருவதால், ஸ்ரீபெரும்புதூர் சார்பதிவாளர் அலுவலகம் பரபரப்பாக இருக்கிறது.

லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை

தீபாவளி நெருங்குவதால், தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினார்கள். 10 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தச் சோதனையில், கணக்கில் வராத பல லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று மாலை நான்கு மணியிலிருந்து சோதனை நடத்தினர்.

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் பன்னாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் இருக்கின்றன. நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான மதிப்பு சொத்துகள் இங்கு பதிவுசெய்யப்படுகின்றன. இதனால், இப்பகுதியில் அதிக அளவு லஞ்சம் புழக்கத்தில் இருப்பதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். மேலும், தீபாவளியை முன்னிட்டு பன்னாட்டு நிறுவனங்கள் சார்பதிவாளர்களுக்கு கிஃப்ட் என்ற முறையில் விலை உயர்ந்த பொருள்களாகவும் பணமாகவும் கொடுக்கிறார்கள் என்ற தகவலால், காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி சிவபாத சேகரன் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். பத்திரம் பதிவுசெய்ய வந்தவர்கள் வெளியே செல்ல முடியாமல் உள்ளேயே காத்திருந்தார்கள். அடுத்தடுத்து நடக்கும் லஞ்ச ஒழிப்பு சோதனைகள் பதிவுத் துறையை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க