வெளியிடப்பட்ட நேரம்: 02:30 (02/11/2018)

கடைசி தொடர்பு:07:18 (02/11/2018)

 கும்பகோணத்தில் பள்ளி ஆசிரியை கொலை - நிச்சயதார்த்தம் முடிந்த 5-வது நாளில் சோகம்

கும்பகோணத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு 5 நாள்களே ஆன நிலையில் தனியார் பள்ளி ஆசிரியை ஒருவர் மர்மமான முறையில் குத்திக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியை கொலை

பாபநாசம் 108 சிவாலயம் பகுதியைச் சேர்ந்தவர் குமரவேல். இவரின் மகள் வசந்தபிரியா இவர் கும்பகோணம் லால் பகதூர் சாஸ்த்ரி சாலையில் உள்ள தனியார்  பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற இவரை  மாலை பள்ளி முடிந்ததும் மர்ம நபர் ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளார். இது அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த நிலையில், கும்பகோணம் அருகே உமாமகேஸ்வரபுரம் பகுதி காவிரி ஆற்றின் படித்துறையில் மர்மமான முறையில் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் சொட்டிய நிலையில், கூச்சலிட்டு ஒடி வந்த வசந்தபிரியா சாலை ஓரத்திலேயே அப்படியே சரிந்து விழுந்து இறந்தார். இதைப் பார்த்த சிலர் அதிர்ச்சியடைந்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து  டி.எஸ்.பி-க்கள் ராமச்சந்திரன், செங்கமலகண்ணன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வசந்தபிரியாவின் உடலைக் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

சிசிடிவி காட்சி

வசந்தபிரியாவுக்கும் வலங்கைமானைச் சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 28-ம் தேதி திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், காவிரி ஆற்றின் கரைக்குச் செல்லக் காரணம் என்ன. இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் சென்றவர் யார். யாரால் கொலை செய்யப்பட்டார் என போலீஸார் விசாரணை நடத்தி  வருகின்றனர். மேலும், ஆற்றின் ஓரத்தில் இரண்டு செல்போன்கள், பேனா, கத்தி போன்றவற்றை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

நிச்சயதார்த்தம் நடைபெற்று 5 நாள்களே ஆன பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க