வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:07:24 (02/11/2018)

``மோடி லீலா” - கரூரில் கைதான இருவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்!

நாடு முழுக்க தசரா விழாவை முன்னிட்டு ராம்லீலா விழா கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், மோடி தமிழர்களுக்கு இழைத்த பத்து விஷயங்களை பத்து முகங்களாக்கி எரித்து மோடி லீலா கொண்டாடிய கரூரைச் சேர்ந்த இருவர் மீது பிணையில் வெளிவரமுடியாத பிரிவுகளில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. தற்போது, இருவருக்கும் ஜாமீன் கிடைத்துள்ளது.

 

 மோடி லீலா கொண்டாடியவர்கள்

கரூர் மாவட்டம், மேலப்பாளையத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். வழக்கறிஞரான இவர், சாமானிய மக்கள் நலக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். கரூர் பகுத்தறிவாளர் மன்ற இணைச் செயலாளராக இருப்பவர் தென்னரசு. நாடு முழுக்க தசரா விழாவில்  'ராவண் தகன்' என்ற பெயரில் ராம்லீலா விழா நடத்தப்பட்டது. உச்சகட்டமாக அமிர்தசரஸில் தசரா விழாவை வேடிக்கை பார்த்த 61 பேர் ரயில் மோதி பரிதாபமாக இறந்தனர். இந்த நிலையில், குணசேகரனும், தென்னரசுவும் சேர்ந்து கடந்த 20-ம் தேதி மேலப்பாளையத்தில் உள்ள தனது தோட்டத்தில் மோடி தமிழத்துக்கு இழைத்த பத்து விஷயங்களை பத்து மோடி முகங்களாக்கி அதைத் தீவைத்து எரித்து மோடிலீலா கொண்டாடினர். அதை வீடியோவாக்கி யூடியூபில் அப்லோடு செய்ய, பரபரத்தது கரூர்.

கரூர் நகர காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பிருத்திவிராஜ், பா.ஜ.க நகரச் செயலாளர் செல்வம் என்பவரிடம் புகார் வாங்கி குணசேகரன் மற்றும் தென்னரசு மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். அவை ஜாமீன் பெறமுடியாத பிரிவுகள். ஆனால், இருவருக்காகவும் வாதாடிய வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், 'இந்த வழக்குக்கும், அவர்கள் இருவர் மீது போடப்பட்டுள்ள வழக்கு பிரிவுகளுக்கும் சம்பந்தமில்லை. அவை மேற்படி வழக்குக்கு சம்பந்தம் இல்லாத பிரிவுகளாகும்' என்று வாதாட, இருவருக்கும் ஜாமீன் கிடைத்திருக்கிறது. வழக்கறிஞர் குணசேகரனுக்கு கடந்த வெள்ளியன்றே ஜாமீன் கிடைக்க, தென்னரசுக்கு இன்று ஜாமீன் கிடைத்திருக்கிறது. 

தமிழ் ராஜேந்திரன்வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், ``ஜனநாயக ரீதியில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய இருவரும் மோடிலீலா கொண்டாடி இருக்கிறார்கள். ஆனால், இருவர் மீதும் 153 ஏ, 505,67 ஐ.டி ஆக்ட்ன்னு 3 பிரிவுகள்ல வழக்கு பதிவு பண்ணிச்சு போலீஸ். இதுல 67 ஐ.டி ஆக்ட் என்பது நான் ஃபெயிலபுள் செக்ஷன். அதாவது, அந்தப் பிரிவு சமூக ஊடகங்களில் ஆபாசமாக செய்தி பரப்புவது என்பதாகும். இருவரும் அப்படி என்ன ஆபாசமாக செய்தி பரப்பினார்கள்ன்னு தெரியலை. இவங்க கொண்டாடிய மோடிலீலாவுக்கும் அவங்க மேல போட்டிருக்கிற மூன்று பிரிவுகளும் பொருந்தாத பிரிவுகள். இந்த பாயின்ட்டுகளை வச்சு தெளிவா வாதாடினேன். தலைமறைவா இருந்த குணசேகரனுக்கு கடந்த வெள்ளிக்கிழமையே முன்ஜாமீனும், கைதான தென்னரசுக்கு ஜாமீனும் கிடைச்சுருக்கு. கருத்துச் சுதந்திரத்துக்கு கிடைத்த இன்னொரு வெற்றி இது" என்றார்.

அதன்பிறகு, கரூர் கிளைச் சிறையில் இருந்து ரிலீஸ் ஆன தென்னரசுவை வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்டோர் சென்று அழைத்து வந்தனர். கரூர் லைட்ஹவுஸ் பகுதியில் இருக்கும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, 'இந்த வெற்றி கருத்துச் சுதந்திரத்துக்கு கிடைத்த வெற்றி' என்று முழக்கமிட்டனர்.