வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (02/11/2018)

கடைசி தொடர்பு:07:30 (02/11/2018)

``இதுதான் டெங்கு பரப்பும் ஏடிஎஸ் கொசு!" - குழந்தைகளுக்கு விழிப்பு உணர்வை ஏற்படுத்திய ஆட்சியர்!

``வீடுகளில் தண்ணீரை சேமித்து வைக்கும் பாத்திரங்களை கொசுக்கள் புகாத வண்ணம் நன்கு மூடி வைக்க வேண்டும். காலி மனை வைத்துள்ளவர்கள் அதை சுத்தமாக வைத்திருக்கவில்லையென்றால் அபராதம் விதிக்கப்படும்" என்று கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

 டெங்கு பணிகள்


கரூர் நகராட்சி 10-வது வார்டு வெங்கமேடு பகுதி, தில்லை நகர் மற்றும் வி.வி.ஜி.நகர் பகுதிகளில் டெங்கு தடுப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பில் மாவட்ட ஆட்சியர் வீடுவீடாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு டெங்கு காய்ச்சலை உருவாக்கும் ஏடிஎஸ் கொசு புழுக்கள் இருப்பதைக் கண்டறிந்து வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்தார். அப்போது பேசிய அவர்,
``புதிதாக வீடு கட்டுபவர்கள், வீடு கட்ட சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை 3 நாள்களுக்கு மேல் சேமிக்கக் கூடாது. கான்கிரீட் மேற்கூரையில் கட்டடத்தின் உறுதித் தன்மைக்காக தேக்கி வைத்திருக்கும் நீரை 3 நாள்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். வீடு கட்டாமல் காலி வீட்டுமனைகளாக வைத்திருப்பவர்கள் தங்கள் மனைகளை முட்புதர்கள், செடிகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்தால் உரிய நோட்டிஸ் வழங்கி அபராதம் விதிக்கப்படும். எனவே, பொதுமக்கள் தனது சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
அங்கு இருந்த குழந்தைகளிடம், ``இதுதான் டெங்கு பரப்பும் ஏடிஎஸ் கொசுக்கள். இதை உற்பத்தியாகும் அளவுக்கு விடக் கூடாது. தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளணும். உங்கள் பெற்றோர்களை அப்படி செய்ய வைப்பீர்களா?" என்று கேட்க, ``செய்ய வைப்போம்" என்று குழந்தைகள் கோரஸாக சொன்னார்கள்.