``ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்” - தூத்துக்குடி சி.பி.எம். சார்பில் புத்தகம் வெளியீடு! | Thoothukudi CPM publish book on Sterlite issue

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (02/11/2018)

கடைசி தொடர்பு:07:43 (02/11/2018)

``ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்” - தூத்துக்குடி சி.பி.எம். சார்பில் புத்தகம் வெளியீடு!

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டக்குழு சார்பில் ``ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.

ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை தமிழக அரசு, சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றியபோது இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், தொடர்ந்த வழக்கில் சி.பி.எம். கட்சியினர் தங்களையும் இணைத்துக்கொண்டனர். இந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்பாயம் நியமித்த தருண் அகர்வால் குழுவிலும் ஆலைக்கு எதிராக தங்களின் கருத்துகளைப் பதிவு செய்தனர். தூத்துக்குடியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், ``ஸ்டெர்லைட்டை வெளியேற்றுவோம்” என்ற புத்தகத்தை அக்கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழக அரசால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது. அதை எதிர்த்து, பசுமைத் தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

ஓய்வுபெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில், ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அந்தக் குழுவின் அறிக்கையின்படி, முடிவு எடுக்கப்படும் என பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் 5-வது எதிர் மனுதாரராக மார்க்சிஸ்ட் கட்சி சேர்க்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டாம் என்பதற்கென தருண் அகர்வால் குழுவிடம் செப்டம்பர் 23-ம் தேதி மற்றும் அக்டோபர் 4-ம் தேதி ஆகிய தேதிகளில் ஆதாரங்களை வழங்கியுள்ளோம். அதில் முக்கியமான  தகவல்களை ஆவணங்களின் அடிப்படையில் தொகுத்து அதை மக்களின் பார்வைக்காக புத்தகமாக வெளியிட்டுள்ளோம். 

புத்தகம்

பொதுவாக, தொழிற்சாலைகள் பச்சை, ஆரஞ்சு, சிவப்பு என 3 நிறப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் சிவப்பு நிறம் என்பது சுற்றுச்சுழலுக்கும் மக்களுக்கும் அதிக பாதிப்பை உண்டாக்கும் வகையிலான தொழிற்சாலைகளாகும். அந்தப் புள்ளிகளின் அடிப்படையில்  பாதிப்புகளை அளவிடுகிறார்கள். அதில்,  60 புள்ளிகளுக்கு மேல் இருக்கும் நிறுவனங்களை  சிவப்பு பிரிவில் கொண்டு வருகிறார்கள். இதில் ஸ்டெர்லைட் ஆலை, 60-க்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்குள் 1 கோடியே 17 லட்சம் டன் தாமிரத் தாதுவை இறக்குமதி செய்திருக்கிறது ஸ்டெர்லைட்.  

அரைத்த தூள்களாக அவற்றை இறக்குமதி செய்வதால், அதிலிருந்து எஸ்.பி.எம். எனப்படும் துகள்கள் காற்றில் கலக்கிறது. இந்தத் துகள்கள் 10 ஆண்டுகளுக்குள் 1 சதவிகிதம் என்ற அளவில் கலந்திருந்தாலும் 1 லட்சம் டன் துகள்கள் காற்றில் கலந்திருக்கும். இது மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் என, தொழில்நுட்ப அளவிலான ஆதாரங்களையும் இப்புத்தகத்தில் இணைத்துள்ளோம். தாமிரத்தை பிரித்தெடுக்கும்போது, கதிர்விச்சுத் தனிமங்கள் இருப்பதாகச் சொல்கிறவர்கள், அவை எந்த அளவில் இருக்கிறது எனச் சொல்ல மறுக்கிறார்கள்.

இந்தத் தகவலை நீதிபதி மூலம் கொண்டு வர கேட்டிருக்கிறோம். அதேபோல் தகவல் அறியும் சட்டம் மூலம் கேட்டும் சில தகவல்களைத் தர மறுக்கிறார்கள். அதையும் நீதிமன்றத்தின் வாயிலாகக் கொண்டு வர வேண்டும் எனவும், இந்த ஆலை குறித்து 2 தீர்ப்புகள் வந்துள்ளன. இதையும் கணக்கில் கொள்ள வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுள்ளோம். இந்த அனைத்து தகவல்ககளின் சாராம்சங்களை  ஒரு பிரசுரமாக பதிப்பித்து மக்கள் முன் வைக்கிறோம். மக்களுக்கும் மண்ணுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஸ்டெர்லைட்டை புரிந்துகொண்டு அதை மீண்டும் இயக்க அனுமதிக்க கூடாது.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க