வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (02/11/2018)

கடைசி தொடர்பு:07:50 (02/11/2018)

``எனது இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லுங்க...” - தம்பிதுரையிடம் கேள்வி கேட்ட இளைஞர் ஆவேசம்

தொகுதி மக்களிடம் மனு வாங்க போனபோது, 'நாலரை வருடமாகத் தொகுதிக்கே வரவில்லையே' என்று கேள்வி கேட்ட இளைஞரிடம் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் கரூரில் வைரலானது. இந்த நிலையில், விடாக்கண்டனான அந்த இளைஞர், 'விகடன் இணைதளம் வாயிலாக தம்பிதுரைக்கு ஒரு கேள்வி கேட்பதாகவும், அதற்கு அவரால் பதில் சொல்ல முடியுமா?' என்று கேட்டும் அதிர வைக்கிறார்.

 தம்பிதுரை

மக்களவை துணை சபாநாயகர் மற்றும் அ.தி.மு.கவின் கொள்கைப் பரப்புச் செயலாளராகவும் இருக்கும் தம்பிதுரை கரூர் தொகுதி எம்.பியாவார். நான்கு முறை கரூர் தொகுதியில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். ``இருந்து என்ன புண்ணியம். இந்தத் தொகுதிக்கு உருப்படியா எதையும் செய்யவில்லை" என்று மக்கள் அவர்மீது வெறுப்பாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அடுத்த வருடம் தேர்தல் வர இருப்பதால், கடந்த இரண்டு மாதங்களாகத் தொகுதி முழுக்க விசிட் அடித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கி வருகிறார். பல இடங்களில் மக்கள் அவரை கேள்விக் கேட்டு ஒருவழி பண்ணுகிறார்கள். அந்த வகையில், கரூர் மாவட்டம், தாளியாபட்டி என்ற கிராமத்துக்கு மனு வாங்கச் சென்றார். அப்போது அவரை முற்றுகையிட்டு மக்கள், ``நீங்க எம்.பியாகி இத்தனை வருஷமாச்சு. இப்பதான் உங்களுக்கு எங்களை கண் தெரிஞ்சதா?" என்று கேள்விகளால் துளைத்தனர். விஜயகுமார் என்ற இளைஞர், ``நாலரை வருடமா வரலை. இப்போ தேர்தல் வரபோறதால், மனு வாங்கறதா வந்து ஏமாத்துறீங்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

இதனால், கோபமான தம்பிதுரை அந்த இளைஞரைப் பார்த்து, ``இந்தா பாரு.. நான் ஒண்ணும் உன்னுகிட்ட ஓட்டுக் கேட்டு வரவில்லை. நீ எனக்கு ஓட்டு போட வேண்டாம். நான் இந்த கிராமத்துக்கு பலமுறை வந்திருக்கிறேன். நீ இப்படி பேசுறது தப்பு. இந்த நாடக மேடையை யாரு கட்டிக் கொடுத்தா? எம்.பி நிதியில்  நான்தான் கட்டிக் கொடுத்தேன். எனக்கு முப்பதாயிரம் கிராமங்கள் இருக்கு. எல்லா கிராமத்துக்கும் போக முடியாது. இன்னைக்கு இங்க வந்துட்டு போனா திரும்பி வர அஞ்சு வருஷம் ஆவும். கடந்த ஆறு மாசமா தினமும் அம்பது கிராமத்துக்குப் போறேன். சும்மா வரலை வரலைன்னு சொல்லக்கூடாது. 'தொகுதிக்கு வரலை'ன்னு சொல்றது இப்போது எங்கும் விஜயகுமார்ஃபேஷனாகிவிட்டது. உங்களுக்கு என்ன வேணும்ன்னு கேளுங்க. இதை செஞ்சு தாங்க, அதை செஞ்சு தாங்கன்னு சொல்லுங்க. அதை விட்டுட்டு, 'நாலரை வருஷம் ஆச்சு; நீங்க தொகுதிக்கே வரலை'ன்னு சொல்றதுல என்ன பலன் கிடைக்கப் போவது. அந்த வார்த்தைகளைக் கேட்டு கேட்டு எனக்கு புளிச்சுப் போச்சு!" என்று அந்த இளைஞரை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார். 

தம்பிதுரை தன்னிடம் கேள்வி கேட்ட அந்த இளைஞரிடம் நேருக்கு நேராக கோபத்துடன் வாக்குவாதம் செய்த சம்பவம் கரூர் மாவட்டத்தில் வைரலானது. இந்த நிலையில், அந்த இளைஞர் விஜயகுமாரை இரண்டு நாள்களாக தேடிப் பிடித்துப் பேசினோம். `` `எனக்கு 30,000 கிராமம் இருக்கு. உன் ஒரு கிராமத்துக்கு அடிக்கடி எப்படி வர முடியும்?'ன்னு அவர் கேட்டார் இல்லையா. நான் அவர்கிட்ட விகடன் இணைதளம் மூலமா ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். அவர் பதில் சொல்லிட்டா, அவர் சொல்றதை நான் ஏத்துக்குறேன். கடந்த எம்.பி தேர்தலின்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடக்கும் நாள் வரை ஒரு மாதகாலம்தான் கேப் இருக்கும். ஆனால், அப்ப அதே 30,000 கிராமத்தையும், அந்த ஒரு மாதத்துக்குள் இரண்டு அல்லது அதிகபட்சம் மூன்று முறை வரை ஓட்டுக் கேட்டு சுத்தி வர முடிந்த அவரால், நாலரை வருடங்களில் ஒருமுறைகூட எங்க கிராமத்துக்கு வர வழியில்லைன்னு சொல்றதை எப்படி ஏத்துக்க முடியும். தேர்தல் நேரத்தில் மட்டும் ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு மாத காலத்துக்குள் மூன்று முறை அவரால் எப்படி போக முடிகிறது. அப்ப மட்டும் அவருக்கு இறக்கை முளைச்சுடுமா. இதுக்கு அவர் பதில் சொல்லட்டும்" என்றார் ஆக்ரோஷமாக!.