வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:08:01 (02/11/2018)

மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பு - அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்றம்

மேகமலை வன உயிரின சரணாலயத்தில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பியால் இதுவரை 3 யானைகள் பலியாகியுள்ளன. இந்தச் சம்பவம் வன விலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

யானை

இது தொடர்பாக கொடைக்கானலைச் சேர்ந்த எஸ்.மனோஜ் இமானுவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார். அதில், ``லோயர்கேம்பில் நீர் மின் திட்டம் மூலமாக உற்பத்தியாகும் மின்சாரம், மேகமலை வழியாக உயர்மின் அழுத்த மின் கம்பி வழியாகக் கொண்டுசெல்லப்படுகிறது. இந்த மின் கம்பிகள் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்படாமல் இருப்பதால் தற்போது மிகவும் தாழ்வாகச் செல்கின்றன. இதனால், கடந்த 18.6.2018-ல் தாய் யானை தன் குட்டியுடன் மின்கம்பி உரசி உயிரிழந்தது. அதே இடத்தில் கடந்த 5.9.2018 அன்று பெண் யானை ஒன்று மின் கம்பி உரசி உயிரிழந்தது. வனப்பகுதியில் 20 முதல் 30 அடி உயரத்தில்தான் மின் கம்பிகள் செல்ல வேண்டும் என்பது தேசிய வன விலங்கு வாரிய விதியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மேகமலையில் 7 அடி உயரத்தில் தான் மின் கம்பிகள் செல்கின்றன. யானைகள் பொதுவாக 11 முதல் 12 அடி உயரம் வரை வளரும். இதனால் யானைகள் இடம் பெயரும்போது மின் கம்பியில் உரசி உயிரிழக்கின்றன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி வனப்பகுதிகளுக்குள் செல்லும் மின் கம்பிகளை முறைப்படுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் அமர்வில் நேற்று (1.11.2018) விசாரணைக்கு வந்தது. அப்போது வனப் பகுதிகளில் உயர் அழுத்த மின் கம்பிகளை அதிக உயரத்தில் கொண்டு செல்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள், ``மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பதைத் தடுப்பது குறித்து வனத்துறை முதன்மை செயலர், தமிழக மின்வாரிய தலைவருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி உரிய முடிவெடுக்க வேண்டும். மேலும், மேகமலையில் சமீபத்தில் 2 யானைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மனுதாரர் அதில் சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார். அதை உதாசீனம் செய்ய இயலாது. ஆகவே, அது குறித்து விசாரித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வன உயிரின குற்றத்தடுப்பு குழுவினருக்கு உத்தரவிட்டு வழக்கை 3 மாதங்களுக்கு ஒத்திவைத்தனர்.

யானைகள் உயிரிழப்பது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து கலையப்பட வேண்டும் என்பதே வன விலங்கு ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.