திருப்பூரில் 4 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை - குற்றவாளியைத் தேடும் காவல்துறை | 4 year children was sexually harassed by unknown men

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:08:05 (02/11/2018)

திருப்பூரில் 4 வயது சிறுமியிடம் பாலியல் வன்முறை - குற்றவாளியைத் தேடும் காவல்துறை

திருப்பூரில் 4 வயதே ஆன சிறுமியிடம் மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டம்

திருப்பூர் அருகே போயம்பாளையம் என்ற பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளின் தாயார் இரவு வேலைக்கு சென்றுவிட்டு நள்ளிரவில் வீடு திரும்புவது வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த நிலையில் குழந்தைகள் இருவரும் வீட்டில் தங்களின் தந்தையின் பாதுகாப்பில் இரவு தூங்கிக்கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் அவர்களது வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார். பின்னர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியைத் தூக்கிக்கொண்டு வீட்டின் மொட்டை மாடிப் பகுதிக்கு  சென்றிருக்கிறார். அங்கு சிறுமியின் வாயில் துணியை வைத்து அடைந்து, கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடியிருக்கிறார்.

இதில் ரத்தக் காயங்கள் அடைந்த அந்த சிறுமி, அழுதுகொண்டே சென்று தன் தந்தையிடம் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்த தந்தை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சிறுமியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பதைபதைப்புடன் அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் முறையான சிகிச்சையளிக்காமல், மருத்துவர்கள் அலட்சியத்துடன் இருந்ததாக சர்ச்சை வெடித்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், மருத்துவமனையில் உடனடியாக சிறுமிக்கு சிகிச்சையளிக்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபடத் துவங்கினார்கள். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தி, சிறுமிக்கு சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்திருப்பதாகவும், சிறுமியிடம் பாலியல் வக்கிரத்தில் ஈடுபட்ட நபரை விரைவில் தேடிப்பிடித்து கைது செய்வதாகவும் உறுதியளித்த பிறகே சாலை மறியல் முடித்துக்கொள்ளப்பட்டது. சிறுமியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.