ஆவடி பெருநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை! | Raid in Aavadi municipality

வெளியிடப்பட்ட நேரம்: 05:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:08:11 (02/11/2018)

ஆவடி பெருநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பெருநகராட்சியில் நேற்று மாலை ஐந்து மணியளவில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி உதய சங்கர் தலைமையில் எட்டு பேர் கொண்ட குழு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தனியார் நிறுவனங்கள் பரிசுப் பொருள்கள் அல்லது காசு வழங்கப்படுகின்றதா என்று நகராட்சி ஊழியர்களைச் சோதனை செய்தனர். கமிஷனர் ஜோதிகுமார் அறையில் உள்ள பீரோ மற்றும் அவரது ஜீப் மற்றும் அலுவலகத்தில் உள்ள பல இடங்களில் சோதனை செய்தனர். 

ஆவடி நகராட்சி கமிஷ்னர்

கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு ஆவடி நகராட்சி கமிஷ்னராக மதிவாணன் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் ஆவடி நகராட்சியில் பல இடங்களில் சாலைகள் போடாமல் பணம் கையாடல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதையடுத்து, அவர் திடீரென கடலூருக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று முன்தினம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆவடி பகுதி முழுவதும் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. 

இந்த நிலையில், இன்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து மணிக்குத் தொடங்கிய சோதனை இரவு எட்டு மணி வரை நீடித்தது.  சோதனை முடித்து வெளியேவந்த டி.எஸ்.பி உதய சங்கர்,  ``இது வழக்கமான சோதனைதான் இந்தச் சோதனையில் முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை” என்று தெரிவித்தார்.  

ஆனால் கமிஷ்னர் ஜோதிக்குமார் அறையிலிருந்து முக்கிய ஆவணங்கள், அதாவது மதிவாணன் பணியாற்றியபோது விடப்பட்ட டெண்டர் பணிகள் தொடர்பான ஆவணங்கள் சி.டி-க்கள் பென்ட்ரைவ், பில் புத்தகங்கள் கைப்பற்றி எடுத்துச் சென்றனர். பூட்டப்பட்டிருந்த ஒரு பீரோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் உடைத்து அதிலிருந்த ஆவணங்களை எடுத்தனர். பின்னர் கமிஷ்னர் அறையில் வைக்கப்பட்டிருந்த இனிப்பு பாக்கெட்டுகள், பரிசுப் பொருள்கள், பட்டாசுகள் ஆகியவற்றை போலீஸார் ஆய்வு செய்தனர்.
 
சோதனை குறித்து நம்மிடம் பேசிய கமிஷ்னர் ஜோதிகுமார்,  ``நான் இங்கு பணிக்குச் சேர்ந்து இரண்டு மாதங்களாகிறது. வழக்கமான சோதனை தான்” என்று சொல்லிக்கொண்டே ஃபைல்களில் கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்தார். ஆனால், நகரப் பொறியாளர் அறையில் ஆவடியில் உள்ள பெரிய நிறுவனங்கள் பில்டர்கள் ரியல் எஸ்டேட் அதிபர்கள் கொடுத்த விலை உயர்ந்த பரிசு பொருள்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும் அந்த அறையில் சோதனை நடந்திருந்தால் பல லட்ச மதிப்புள்ள பொருள்கள் சிக்கியிருக்கும் என்று சில நேர்மையான அதிகாரிகள் தெரிவித்தனர்.