வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:08:16 (02/11/2018)

நள்ளிரவில் ஆய்வு செய்யும் அதிகாரிகள் - அதிர்ச்சியில் அரிட்டாபட்டி மக்கள்!

மீத்தேன் போன்ற பயங்கர திட்ட நோக்கத்தில் தங்களது கிராமத்தில் அதிகாரிகள் இரவில் ஆய்வு செய்துவருதாக அரிட்டாபட்டி கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

அரிட்டாபட்டி -அதிகாரிகள்

மதுரை மேலூரை அடுத்தது அரிட்டாபட்டி கிராமம். ஏழு மலைகளை சூழ்ந்த கிராமம் இது. இங்கு ஆசிய அளவில் காணப்படாத அறியவகை பறவைகள் வசித்து வருகின்றன. மேலும் சமணர் சின்னங்கள், குடைவரை கோயில்கள் என்று ஏராளமான சுற்றுலா அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில், இங்கு மீத்தேன் எடுக்கப் போவதாக தகவல்கள் பரவின. அதற்காக கம்யூனிஸ்ட் கட்சிகளும் அ.ம.மு.க கட்சியினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இந்த நிலையில், இரவு நேரங்கள் கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வதாக அதற்கு விளக்கம் கேட்டு நேற்று இரவு 8.30 மணிவரை மேலூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தாசில்தார் வெளியே சென்றுவிட்டதால் மீண்டும் நாளை தாசில்தாரை முறையிட திட்டம் தீட்டியுள்ளனர்.

இது தொடர்பாக அரிட்டாபட்டி ஏழு-மலை பாதுகாப்புக் குழுவின் செயலாளர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் பல இயற்கை வளங்கள் இருப்பதால் சிலர் அழிக்கத் துடித்தனர். கிரைனைட் நிறுவனத்தைக்கூட அடித்து துரத்தினார்கள் எங்கள் கிராம மக்கள். இந்த நிலையில், எங்கள் கிராமத்தில் கடந்த 15 நாள்களாக இரவு நேரத்தில் கனிமவளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்துவருவது தெரியவந்துள்ளது. இந்த நிலையில், நேற்று காலையில் ஆய்வு செய்த அதிகாரிகளை விசாரித்தபோது எங்களுக்கு ஒன்றும் தெரியாது ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்வதுதான் எங்கள் வேலை என்று தெரிவித்தனர்.

இந்தப் பிரச்னை தொடர்பாக தெரிந்துகொள்ள மேலூர் தாசில்தார் சரவணனை சந்திக்க தொடர்புகொண்டோம். ஆனால், எந்தப் பயனும் இல்லை. அதனால் தாசில்தார் அலுவலகத்தில் இருந்த கல் ஒன்றுக்கு மனுவை அளித்திவிட்டு வந்துவிட்டோம். மீண்டும் நாளை காலை தாசில்தார் மற்றும் கலெக்டரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். எங்கள் கிராமத்தில் மீத்தேன் போன்ற திட்டம் எதாவது செயல்படுத்த அரசு முயன்றால் கடுமையான போராட்டம் வெடிக்கும் எனத் தெரிவித்தார்.