வெளியிடப்பட்ட நேரம்: 09:45 (02/11/2018)

கடைசி தொடர்பு:09:45 (02/11/2018)

`கல்லா கட்டும் கரூரில் தாமதமாக ரெய்டு ஏன்?’ - கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்

``கரூர் மாவட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சரின் மாவட்டம் என்பதால், இங்கு வட்டாரப் போக்குவரத்துத்துறை அலுவலகத்தில் ஒப்புக்கு லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடந்தது" என்று சிலர் சர்ச்சையை கிளப்புகிறார்கள்.

 


கரூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், டாஸ்மாக் அலுவலகங்கள், பொதுப்பணித்துறை அலுவலகங்கள் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் திடீரென அதிரடி சோதனை நடத்தப்பட்டன. ஊழல் கண்காணிப்புத்துறை இயக்குநர் உத்தரவின் பேரில் ஆய்வுக்குழு அலுவலர்களுடன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலர்களும் இணைந்து இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.

கரூரில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ஆறு அலுவலர்கள் மதியம் மூன்று மணியிலிருந்து அதிரடி சோதனையை மேற்கொண்டனர். 'எங்கிருந்து வருகிறார்கள், என்ன ரெய்டு என்று எந்த விவரமும் சொல்லாமல் சோதனையை மேற்கொண்டனர். சோதனையின் முடிவில் கணக்கில் வராத 32,900 ரூபாயை பறிமுதல் செய்திருப்பதாக சொன்னார்கள். இதுதான் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுசம்பந்தமாக, நம்மிடம் பேசிய கரூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், ``கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்தான் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். கரூர் மாவட்டம் போக்குவரத்து சம்பந்தமான முக்கிய மாவட்டம். திருச்சி டு கோவை சாலை, கரூர் டு ஈரோடு சாலை, கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண் - 7 உள்ளிட்ட போக்குவரத்து நெரிசல் அதிகம் கொண்ட முக்கிய சாலைகள் போகும் மாவட்டமாக உள்ளது. தமிழகத்தின் மையப்பகுதியாக கரூர் இருப்பதால்தான் முக்கிய போக்குவரத்து மார்க்கமாக கரூர் மாவட்டம் உள்ளது.

இங்கு வட்டாரப் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலை பார்க்க அதிகம் விரும்புவார்கள். பஸ்பாடி கட்டும் மாவட்டமும் இதுதான். லாரிகள் அதிகம் புழங்கும் மாவட்டமும் இதுதான். இதனால், 'இங்கே பணிபுரிந்தால் அதிகமாக கல்லா கட்டலாம்' என்று ஊழியர்கள் குஷியாவாங்க. இங்க வட்டார போக்குவரத்துத்துறையில் லஞ்சம் பெற்றுத் தரவே பல புரோக்கர்கள் உலாவுகிறார்கள். அப்படி லட்சக்கணக்கில் லஞ்சமே இங்கு பரிமாறப்படும் சூழலில், சோதனையில் வெறும் 32,900 மட்டுமே கிடைத்தது என்று சோதனை செய்த அதிகாரிகள் சொல்வது முரணாக இருக்கு. மற்ற மாவட்டங்களில் காலையிலேயே சோதனை ஆரம்பிக்க, கரூரில் மட்டும் மாலை 3 மணிக்கு ஆரம்பித்தார்கள். அப்படி காலதாமப்படுத்தியதைப் பார்த்தால், அலர்ட் கொடுக்க அப்படி காலதாமதமானதாகவே கருத வேண்டி இருக்கு. இதற்குப் பின்னே போக்குவரத்துறை அமைச்சர் தரப்பு இருக்கலாம்ன்னு பேசிக்கிறாங்க. தனது மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லட்சக்கணக்கில் பணம் சோதனையில் கிடைத்தால், மேலிடத்தின் கோபத்துக்குதான் ஆளாக நேரிடும் என்பதால், சோதனையை காலதாமதப்படுத்தியிருக்க கூடும்'ன்னு சொல்றாங்க. எது உண்மையோ?" என்றார்கள்.

இதுசம்பந்தமாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பில் பேசினால், ``இது வழக்கமாக தீபாவளியை ஒட்டி நடக்கும் மாமூல் சோதனைதான். இதற்கும் அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 'சோதனை செய்ய வந்த அதிகாரிகளை தாமதப்படுத்த வைத்தார்'ன்னு சொல்றது அபாண்டமான பழி. எதற்கெடுத்தாலும் அண்ணன் பெயரை இழுப்பது தேவையில்லாதது" என்றார்கள்.