வெளியிடப்பட்ட நேரம்: 10:27 (02/11/2018)

கடைசி தொடர்பு:10:27 (02/11/2018)

`பட்டாசு வெடிங்க ஆனா... சத்தம் வரக்கூடாது’ - தமிழக அரசு அறிவிப்பு

தமிழகத்தில் தீபாவளியன்று எந்ததெந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தீபாவளி

இந்தியா முழுவதும் பட்டாசு விற்பனைக்குத் தடைவிதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சுற்றுச்சூழல் விதியிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க வேண்டும் என சிவகாசி பட்டாசுத் தொழிலாளர்களும் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து தரப்புகளும் வாதங்களும் நிறைவடைந்த நிலையில், கடந்த அக்டோபர் 23-ம் தேதி சில நிபந்தனைகளுடன் தீர்ப்பு வழங்கியது. மாசு குறைவாக உள்ள பட்டாசுகளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும். தீபாவளி நேரத்தில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். விதிகளை மீறிச் செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தீர்ப்பு வழங்கினர். 

பட்டாசு வெடிக்கக் கூடுதல் நேரம் வழங்கக் கோரி, தமிழக அரசு சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில் வடமாநிலங்களில் தீபாவளி இரவில் கொண்டாடப்படுகிறது. தமிழக மக்கள் விடியற்காலையில் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். எனவே, தமிழகத்தில் அதிகாலையில் பட்டாசு வெடித்து பண்டிகையைக் கொண்டாட அனுமதி வேண்டும் என்று கூறப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தீபாவளியன்று எப்போது பட்டாசு வெடிப்பது என்பது பற்றி தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கலாம் என அறிவுரை வழங்கியது.  

இந்த நிலையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரத்தைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையின்போது காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் வெடிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அதிக ஒலி எழுப்பும் சரவெடிகளை தவிர்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.