வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (02/11/2018)

கடைசி தொடர்பு:11:32 (02/11/2018)

தேனியில் நியூட்ரினோ அமைக்க இடைக்காலத்தடை - தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இடைக்காலத்தடை வழங்கி தீர்ப்பு வழங்கி இருக்கிறது.

நியூட்ரினோ

தமிழகத்தின் தேனி மாவட்டம், அம்பரப்பர் மலையில் அமைய இருக்கும் நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியது. அந்த அனுமதியை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் சார்பில் சுந்தர்ராஜன் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார். 

அந்த மனுவில், 'நியூட்ரினோ திட்டத்துக்கு வழங்கப்பட்ட மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மக்களின் கருத்தைக் கேட்ட பிறகே நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும். சட்ட விதிகளுக்குப் புறம்பாக இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்கிய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை முழுவதும் கடந்த அக்டோபர் 9-ம் தேதி நிறைவடைந்த நிலையில், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியதற்குத் தடை இல்லை. தேனி நியூட்ரினோ ஆய்வக மையம் அமைக்க இடைக்காலத் தடை விதித்துத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனால் தொடர்ந்து இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியாது. வன உயிரினங்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்பது குறித்து, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு வாரியத்திடம் அனுமதி வாங்கிய பின்னர்தான், இந்த திட்டத்தை தொடர முடியும்.