வெளியிடப்பட்ட நேரம்: 12:36 (02/11/2018)

கடைசி தொடர்பு:12:36 (02/11/2018)

அ.தி.மு.க பேனர் கிழிப்பில் போலீஸ் அதிரடி! கொல்லைப்புறமாக தப்பியோடிய அ.ம.மு.க நிர்வாகிகள்

பசும்பொன்னில் அ.தி.மு.க-வினர் வைத்திருந்த வரவேற்பு பேனர்களை சேதப்படுத்திய வழக்கில் மாவட்டம் முழுவதும் உள்ள அ.ம.மு.க-வினர் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பசும்பொன்னில் சேதப்படுத்தப்பட்ட அதிமுக பேனர்கள்
 

கடந்த 30-ம் தேதி பசும்பொன்னில் நடந்த குருபூஜை விழாவில் பங்கேற்க வந்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை வரவேற்று நூற்றுக்கணக்கான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அ.தி.மு.க சார்பில் பசும்பொன்னில் வைக்கப்பட்டிருந்த இந்த பேனர்கள் அ.ம.மு.க தொண்டர்களால் கிழித்து சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் முனியசாமி புகார் கொடுத்துள்ளார். இந்த நிலையில் அ.தி.மு.க பேனர்கள் 36, தி.மு.க பேனர்கள் 28, ம.தி.மு.க பேனர்கள் 4  என மொத்தம் 68 பேனர்கள் பசும்பொன்னில் சேதப்படுத்தப்பட்டிருப்பதாகவும், இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து அப்போது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளைக் கொண்டு விசாரணை நடத்தி வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்திருந்தார்.

இதனிடையே முதல்வர், துணை முதல்வர் பேனர்கள் சேதப்படுத்தப்பட்ட வழக்கு தொடர்பாக ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, கமுதி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகிகள் 52 பேர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை மாவட்டத்தில் உள்ள அ.ம.மு.க-வினரின் வீடுகளுக்குச் சென்ற போலீஸார் அங்கிருந்த அ.ம.மு.க நிர்வாகிகளைக் கைது செய்தனர். போலீஸாரின் இந்த திடீர் நடவடிக்கையை அறிந்த நிர்வாகிகள் பலர் வீட்டின் கொல்லைப்புறம் வழியாகத் தப்பி ஓடினர்.

மாவட்டத்தில் அ.தி.மு.க-வுக்கு எதிராக இயங்கி வரும் அ.ம.மு.க-வினரை அச்சுறுத்தும் வகையிலும், அவர்களைத் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட விடக்கூடாது என்ற நோக்கத்துடனும் இந்தக் கைது நடவடிக்கைகள் மாவட்ட அமைச்சரால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக அ.ம.மு.க-வினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனிடையே கைது நடவடிக்கைகள் தொடர்ந்தால் ராமநாதபுரத்தில் பெரும் போராட்டம் நடத்துவோம் என டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.