வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (02/11/2018)

கடைசி தொடர்பு:12:50 (02/11/2018)

4 வழிச் சாலையில் பதறவைத்த பைக், கார், லாரி! - பறிபோன 3 உயிர்கள்

நெல்லையில் நடந்த கோர விபத்தில் 3 பேர் பலியாகினர். 4 வழிச் சாலையில் பைக், கார், லாரி ஆகியவை அடுத்தடுத்து மோதி விபத்து நடந்துள்ளது.   

சாலை விபத்து

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பேச்சியம்மாள். இவர் நெல்லையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றி வந்தார். தினமும் நாகர்கோவிலில் இருந்து கார் மூலமாக அலுவலகத்துக்கு வந்து செல்வது வழக்கம். அதன்படி, இன்று காலை அலுவலகத்துக்கு கார் மூலமாக அவர் வந்துகொண்டிருந்தார். காரை பாப்புலர் என்பவர் ஓட்டி வந்தார். நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு அருகே கார் வந்தபோது 4 வழிச்சாலை சந்திப்பில் பைக்கில் வந்த ஒருவர் திடீரென சாலையைக் கடக்க முயன்றுள்ளார். சிறுமளஞ்சி கிராமத்தைச் சேர்ந்த ஈசாக் என்ற அந்த இருசக்கர வாகன ஓட்டி, சாலையின் குறுக்கே வந்ததும் அவர் மீது மோதாமல் இருப்பதற்காக காரை திருப்பி உள்ளார். ஆனால், இரு சக்கர வாகனத்தில் வந்த ஈசாக் நடுரோட்டில் நின்றுவிட்டதால் அவர் மீது கார் மோதியது. 

அதைத் தொடர்ந்து கார் எதிர் திசைக்குச் சென்றுவிட்டது. அப்போது மறு பகுதியில் வாழைக்காய் ஏற்றி வந்த லாரி டிரைவர், காரின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். அப்போது லாரி நிலைதடுமாறி சாலையில் விழுந்து கவிழ்ந்து உருண்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஈசாக், காரில் வந்த பேச்சியம்மாள், கார் ஓட்டுநர் பாப்புலர் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து அறிந்ததும் மூன்றடைப்பு போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று 3 பேரின் உடலையும் கைப்பற்றி உடற்கூறு சோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். லாரி ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். 4 வழிச் சாலையில் நடந்த இந்தக் கோர விபத்து அப்பகுதி மக்களை சோகம் அடைய வைத்தது. 

சாலைவிபத்து

இதனிடையே, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே 4 வழிச் சாலையில் காரின் மீது பின்னால் வந்த இரு அரசுப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதின. இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 4 வழிச்சாலையில் தொடர்ந்து நடக்கும் விபத்துகள் வாகன ஓட்டிகளை அச்சம் அடைய வைத்துள்ளது.