வெளியிடப்பட்ட நேரம்: 13:58 (02/11/2018)

கடைசி தொடர்பு:13:58 (02/11/2018)

கத்தாருக்கு அனுப்பப்பட்ட ‘மெத்தாம்பிடமைன்’ - பார்சல் திரும்பி வந்ததால் சிக்கிய நைஜீரிய வாலிபர்

மெத்தாம்பிடமைன் என்ற போதை பொருளை அனுப்பி நைஜிரீயா வாலிபர் பிளமன்தாமஸ்

சென்னையிலிருந்து கத்தாருக்கு `மெத்தாம்பிடமைன்' என்ற போதைப் பொருளை அனுப்பிய நைஜீரியா வாலிபர் பிளமன்தாமஸ் சிக்கிய கதை வித்தியாசமானது. பார்சல் திரும்பி வந்ததால் 26 நாள்களுக்குப்பிறகு மாட்டியிருக்கிறார். 

சென்னையிலிருந்து வௌிநாடுகளுக்கு கூரியர் சர்வீஸ் மூலம் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவான என்.சி.பி-க்கு ரகசிய தகவல் கிடைத்தது.  அதன் பேரில் சென்னை விமான நிலையத்தில் இருந்து வௌிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்களை என்.சி.பி போலீஸார்,  சுங்கத்துறை அதிகாரிகள் துணையுடன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 5.9.2018ல் சென்னையில் இருந்து கத்தார் நாட்டில் உள்ள தோகா நகரத்துக்கு அனுப்பப்பட்ட பார்சல் ஒன்று சென்னை விமான நிலைய கார்கோவுக்கு திரும்பி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பார்சலை யாரும் திரும்பபெறவில்லை. சிறிய வகை மிஷின் என்ற பெயரில் அனுப்பப்பட்ட அந்தப் பார்சலை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்துப் பார்த்தனர். அப்போது உள்ளே 200 கிராம் எடையுள்ள ‘மெத்தாம்பிடமைன்’ என்ற போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. அதன் சர்வதேச மதிப்பு பல லட்சம் ரூபாயாகும்.

சென்னையில் இருந்து கத்தாருக்கு அனுப்பிய நபர் குறித்து என்.சி.பி போலீஸார் விசாரித்தனர். பார்சல் அனுப்பப்பட்ட தேதியில் யார், யார் பார்சல் சர்வீஸ் அலுவலகத்துக்கு வந்தார்கள் என்பதை சிசிடிவி கேமரா பதிவு மூலம் ஆய்வு செய்தனர்.  அப்போது நைஜீரிய வாலிபர் பிளமன்தாமஸ், பார்சலை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டது. அவரும் பார்சல் அலுவலகத்துக்கு வரும் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. அதன் பேரில் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் சென்னை மேடவாக்கத்தில் அந்த நைஜீரிய வாலிபர் பிளமன்தாமஸ் பதுங்கியிருப்பது தெரியவந்தது. உடனே போலீஸார்  26 நாள்களுக்குப்பிறகு அவரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல நாள்களாக அவர் சென்னையிலிருந்து போதைப்பொருள்களை கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பியது தெரியவந்தது. டெல்லியில் இருந்து போதைப்பொருள்களை அவரது கூட்டாளியான இன்னொரு நைஜீரிய நபர் ரகசியமாக அனுப்பி வைப்பதும் போலீஸாரின் விசாரணையில் வெளிவந்துள்ளது. கைதான நைஜீரிய வாலிபர் பிளமன்தாமஸை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். டெல்லி வாலிபரை கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.