வெளியிடப்பட்ட நேரம்: 14:53 (02/11/2018)

கடைசி தொடர்பு:14:53 (02/11/2018)

`அன்றிலிருந்து இன்று வரை அந்த ஹோட்டல்தான்' - டி.டி.வி. தினகரன் விளக்கம்!

'ஸ்டாலினை சந்திக்கவும் இல்லை, சந்திப்புக்கான அவசியமும் இல்லை' என டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். 

டிடிவி தினகரன்

முத்துராமலிங்க தேவர் ஜெயந்திக்குச் சென்றிருந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் மதுரை ஹோட்டலில் தங்கியிருந்தபோது, அதே ஹோட்டலில் தங்கியிருந்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் என நமது அம்மா இதழில் கட்டுரை வெளியானது. மேலும், இந்தச் சந்திப்புக்கு பிறகே 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் மேல்முறையீடு செய்வதில்லை எனத் தினகரன் முடிவுசெய்ததாகவும் தகவல்கள் பரப்பப்பட்டது. இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டி.டி.வி. தினகரன் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்து, அந்தச் சம்பவம்குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, ``முதன் முதலாக மேலூர் கூட்டம் நடந்தபோது, எனது நண்பர் சாமி இந்த ஹோட்டலை அறிமுகப்படுத்தித் தங்கவைத்தார். அதிலிருந்து இன்று வரை நான் மதுரை சென்றால், அங்குதான் தங்குவேன். கடந்த ஆண்டும் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி சென்றிருந்த போதுகூட ஸ்டாலின் அங்கு தங்கியிருந்தார். 

அதேபோல, இந்த ஆண்டும் தங்கியிருந்தார். ஏன் ஜி.கேவாசன் கூடத்தான் அந்த ஹோட்டலில் அன்றைக்குத் தங்கியிருந்தார். ஹோட்டலில் வைத்து ஸ்டாலினை ரகசியமாகச் சந்திக்கவும் இல்லை, சந்திப்புக்கான அவசியமும் இல்லை. நான் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அன்றைக்கு இரவு 12 மணிக்கு மேல்தான் ஹோட்டலுக்கு வந்தேன். சந்தேகம் இருப்பவர்கள், ஹோட்டலில் உள்ள சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்யுங்கள். ஒரே ஹோட்டலில் தலைவர்கள் தங்குவது ஒன்றும் பெரிய விஷயமில்லை. வழக்கமான ஒன்றுதான். தகுதிநீக்க விவகாரத்தில் எங்கள் எம்.எல்.ஏ-க்கள் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என அப்போது இருந்தே கூறிவருகிறேன். அதற்கு ஏற்றாற்போல தொகுதி மக்களிடம் கலந்தாலோசித்து எம்.எல்.ஏ-க்கள் எடுத்த முடிவையே தெரிவித்தேன். மேல்முறையீடு போவதில்லை என்றதும் ஏன் இத்தனை பேர் கேள்வி எழுப்புகின்றனர் " என்றார். 

அப்போது, பேனர் கிழிப்பு விவகாரம்குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், ``பேனர் கிழிப்பு விவகாரத்தில் வழக்குப் பதிவு செய்ததை எதிர்த்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.   

நீங்க எப்படி பீல் பண்றீங்க