வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (02/11/2018)

கடைசி தொடர்பு:16:00 (02/11/2018)

தொடங்கியது நீட் விண்ணப்பம்! - இன்று முதல் 30 நாள்களுக்கு விண்ணப்பிக்கலாம்

மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு எழுத இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீட்

மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு கடந்த இரண்டு வருடங்களாக இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019-ம் ஆண்டுக்கான நீட் தேர்வு எழுத இன்று முதல் நவம்பர் 30-ம் தேதி இரவு 12 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், இதை nta.ac.in, ntaneet.nic.in ஆகிய ஆன்லைன் பக்கங்கள் மூலம் மட்டுமே விண்ணபிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தேர்வுக்கட்டணமாக எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 750 ரூபாயும், ஓ.பி.சி பிரிவினர் 1,400 ரூபாயும் செலுத்த வேண்டும். 2019-ம் ஆண்டு மே மாதம் 5-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை  நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறவுள்ளது. இதன் முடிவுகள் ஜூன் 5-ம் தேதி வெளியாகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். ஆனால், பல குளறுபடிகளுக்கு நடுவே தேர்வு நடைபெற்றது. இந்த ஆண்டும் அதே அளவிலான மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடமாவது எந்தக் குளறுபடிகளும் இல்லாமல் தேர்வு நடைபெற வேண்டும் என்பதே மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.