வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (02/11/2018)

கடைசி தொடர்பு:16:15 (02/11/2018)

திருக்கை முள்ளினால் குத்தி மீனவர் கொலை! - சண்டையைத் தடுக்க முயன்றவருக்கு நடந்த சோகம்

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில், டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறைத் தடுக்க முயன்ற வாலிபர், திருக்கை மீன் முள்ளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார். கொலையாளி வாலிபரை போலீஸார் தேடிவருகின்றனர்.

கீழக்கரையில் திருக்கை மீன் முள்ளினால் குத்தி மீனவர் கொலை.

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர் நாகராஜன். இதே பகுதியைச் சேர்ந்தவர் முத்து. மதுக்கடைக்கு குடிக்கச் சென்ற இடத்தில்,  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம்செய்து  அனுப்பிவைத்தனர். இந்நிலையில், தங்கள் குடியிருப்புப் பகுதிக்கு வந்த இவர்களுக்கிடையே மீண்டும் தகராறு எழுந்துள்ளது. தகராறை மீனவர் நாகராஜனின் மைத்துனர் ஆனந்த் தடுக்க முயன்றுள்ளார். இதைப் பொறுக்க முடியாத முத்து, தான் மறைத்துவைத்திருந்த திருக்கை மீன் முள்ளால் திடீரென ஆனந்தின் நெஞ்சில் குத்தியுள்ளார். இதனால் மயங்கிச் சரிந்த ஆனந்தை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். ஆனால் திருக்கை மீனின் முள், ஆனந்தின் இதயப்பகுதியில் பலமாகத் தாக்கியதால் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்தார்.

இதையடுத்து, ஆனந்தின் உடல் மருத்துவப் பரிசோதனைக்காக கீழக்கரை மருத்துவமனையில் வைக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்த கீழக்கரை போலீஸார், ஆனந்தை கொலைசெய்த முத்துவைத் தேடிவருகின்றனர்.

திருக்கை மீன்  முள், அதிக விஷத் தன்மை கொண்டது. ஒரு அங்குலம் முதல் அரை அடி வரை நீளம் இருக்கும் இந்த முள், திருக்கை மீனின் வாலின் மேல்பகுதியில் அமைந்திருக்கும். மீனவர்கள் இந்த மீனை பிடித்தவுடன், படகிலேயே வைத்து அந்த விஷ முள்ளை எடுத்துவிடுவார்கள். ஏனெனில், பிடிபட்ட திருக்கை மீனை கையாளும்போது எதிர்பாராத விதமாக மீனவர்களின் உடலில் குத்திவிட்டால் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால், திருக்கை மீனினைப் பிடிக்கும்போது மிகவும் எச்சரிக்கையுடனே கையாள்வார்கள்.