வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (02/11/2018)

கடைசி தொடர்பு:16:30 (02/11/2018)

2 கிலோ நகை கொள்ளையர்களைச் சிக்கவைத்த டி-ஷர்ட்!

நெல்லையில், நகைக்கடையின் பூட்டை உடைத்து 2 கிலோ நகையைக் கொள்ளையடித்த நபரையும் அவருக்குத் துணையாக இருந்த பெண்ணையும் காவல் துறையினர் கைதுசெய்தனர். அவர்களிடமிருந்து நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

நகை கொள்ளையர் கைது

நெல்லை கோடீஸ்வரன் நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர், நெல்லை டவுனில் காவல் நிலையம் எதிரே மதுரா ஜுவல்லரி என்ற நகைக்கடை நடத்திவருகிறார். கடந்த 10 வருடங்களாக ஆர்டரின் பேரில் நகை செய்துகொடுப்பதை மணிகண்டன் வழக்கமாக வைத்துள்ளார். அவரது கடையில், அக்டோபர் 25-ம் தேதி அதிகாலை நேரத்தில் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், 2 கிலோ நகைகளைக் கொள்ளையடித்துச்சென்றார். அதன் மதிப்பு ரூ.60 லட்சம் என மதிப்பிடப்பட்டது.

இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்திவந்த நிலையில், நகைக்கடையிலும் அதன் அருகில் உள்ள கடைகளிலும் இருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தார்கள். அப்போது, அதிகாலை நேரத்தில் டி-ஷர்ட் அணிந்தபடி ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்வதைக் கண்டுபிடித்தனர். ஆனால், அவரது உருவம் கண்காணிப்புக் கேமராக்களில் சரிவர இடம்பெறாததால் அவரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டது. இருந்தாலும், போலீஸார் அந்த நபரைப் பிடிக்க தேடிவந்த நிலையில், அதே டி-ஷர்ட் அணிந்தபடி இரு சக்கர வாகனத்தில் சென்ற ஒரு நப மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதனால், அவரைப் பின்தொடர்ந்துசென்று கண்காணித்துவந்தனர். நாரணம்மாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்ற அந்த நபர், தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் உள்ள மாரிமுத்தாள் என்பவருடன் அடிக்கடி வங்கிக்குச் சென்று வருவது கண்டுபிடிக்கப்பட்டது. வங்கியில் விசாரித்தபோது, இருவரும் தங்கநகைகளை அடகு வைத்திருப்பது தெரியவந்தது. 

அதனால், சந்தேகத்தின் அடிப்படையில் கணேசனைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினார்கள். அவர், நெல்லையில் நகைக்கடையில் கொள்ளையடித்ததையும், தனது பெண் நண்பரான முத்தாத்தாள் என்பவருடன் சேர்ந்து பல்வேறு வங்கிகளில் அடகு வைத்து பணத்தைச் செலவுசெய்ததையும் ஒப்புக்கொண்டார். அதைத் தொடர்ந்து, அவரையும் முத்தாத்தாளையும் கைதுசெய்த போலீஸார், இருவரிடமிருந்து ஒரு கிலோ நகையையும், ஒன்றரை லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் மீட்டனர். வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கொள்ளையர்

இதுகுறித்து நெல்லை மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையாளர் ஃபெரோஸ்கான் அப்துல்லா கூறுகையில், ’’நகைக்கடையில் கொள்ளையடித்தது தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டனர். நகைகளை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம். தீபாவளிப் பண்டிகை சமயத்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் நடக்காத வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். நெல்லையில் கூடுதலாக 27 கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.