வெளியிடப்பட்ட நேரம்: 15:59 (02/11/2018)

கடைசி தொடர்பு:13:12 (04/11/2018)

நிலத்தடி நீரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டின் `மெட்டல்’ விளைவு! - நீர் வாரியத்தின் ஆதாரம்

வேதாந்தா போன்ற நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை இதைப் போன்ற மாசுபாடுகள் வழியாகவும் மக்கள் சிந்தும் ரத்தக் கரைகளின் வழியாகவுமே விட்டுச்செல்கிறார்கள். அதற்கு மற்றும் ஓர் ஆதாரமாக விளங்குகிறது இந்த ஆய்வறிக்கை.

நிலத்தடி நீரில் தூத்துக்குடி ஸ்டெர்லைட்டின் `மெட்டல்’ விளைவு! - நீர் வாரியத்தின் ஆதாரம்

ஸ்டெர்லைட் தொழிற்சாலை அமைந்திருக்கும் தூத்துக்குடி சிப்காட் தொழிற்பேட்டைக்கு உள்ளேயும் அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளிலும் நிலத்தடி நீரின் தரத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வு செய்தது. அதன்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகிலுள்ள பகுதிகளின் நிலத்தடி நீர், ஈயம், ஆர்சனிக், நிக்கல் மற்றும் மேலும் சில தாதுக்களால் மாசடைந்துள்ளது தெரிய வந்துள்ளது. 

கடந்த ஜூன் மாதம் மத்திய நிலத்தடி நீர்வள வாரியம் நடத்திய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்குள் நிலத்தடி நீர் மாதிரிகள் எடுக்கப்படவில்லை. அதைச் சுற்றியிருக்கும் பகுதிகளில்தான் எடுக்கப்பட்டுள்ளது. அதனால், அங்கு ஏற்பட்டிருக்கும் நிலத்தடி நீர் மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் ஆலைதான் காரணமென்று சொல்லமுடியாது என்று ஆய்வுக்குழு தெரிவிக்கிறது. ஆனால் நிலத்தடி நீர் மாசுபாட்டில் என்ன வகை தாதுக்கள் அதிகமாகப் பங்கு வகிக்கிறது என்பதை நாம் பார்க்கவேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகிலுள்ள பகுதிகளில்

ஒரு நகராட்சிக் குடிநீர் குழாயிலிருந்தும் அடிக்குழாய்கள், கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மூலமாக 29 நிலத்தடி நீர்த்தேக்கப் பகுதிகளிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஸ்டெர்லைட் ஆலைக்கு அருகிலிருக்கும் குமரெட்டியாபுரம், தெற்கு வீரபாண்டியபுரம் போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்ட அந்த மாதிரிகள், நிலத்தடி நீர் மேற்கூறிய தாதுப்பொருள்களால் மோசமான அளவில் மாசடைந்திருப்பது தெரிய வந்துள்ளது. 

அதில் சல்ஃபேட், ஃப்ளோரின், ஆர்சனிக், கேட்மியம் போன்றவை அதிகமான அளவில் நீரில் கலந்திருக்கின்றன. சிப்காட் தொழிற்சாலையில் அமைந்திருக்கும் மற்ற நிறுவனங்கள் மட்டுமே இந்த மாசுபாட்டுக்குக் காரணம் என்று ஸ்டெர்லைட் தரப்பினர் அவர்கள் மீதான குற்றச்சாட்டை மறுக்கிறார்கள். ஆனால், நிலத்தடி நீரில் கலந்திருக்கும் மாசு ஏற்படுத்தும் தாதுக்கள் எதிலிருந்து வெளியேறக் கூடியவை என்பதை நாம் பார்க்கவேண்டும். மாசடையக் காரணமான ஆர்சனிக், ஈயம், நிக்கல் போன்ற தாதுக்கள் அனைத்தும் உலோக உற்பத்தித் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறக் கூடியவை. தூத்துக்குடி தொழிற்சாலைகள் பட்டியலின்படி சிப்காட் தொழிற்பேட்டைக்குள் இரண்டு நிறுவனங்களே உலோக உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. அவை ஸ்டெர்லைட் நிறுவனமும், வி.வி மினரல்ஸ் நிறுவனமும். அதிலும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் கடற்கரை மண்ணிலிருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடு தயாரிக்கின்றது. அதோடு அதன் உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 3,000 டன்கள் மட்டுமே. ஸ்டெர்லைட் உற்பத்தியைவிட மிகக் குறைவு.

ஆண்டுக்கும் நான்கு லட்சம் மெட்ரிக் டன்கள் அளவு உலோகங்களைக் கையாண்டு கொண்டிருந்தது ஸ்டெர்லைட் ஆலை. அதன் ஜிப்சம் தேக்கி வைக்கும் கிடங்கின் பரப்பளவில் பாதி மட்டுமே வி.வி மினரல்ஸ் நிறுவனத் தொழிற்சாலையின் மொத்தப் பரப்பளவு. அதோடு கடல் மண்ணிலிருந்து எடுக்கப்படும் தாதுப் பொருளில் இவ்வளவு ஈயம், நிக்கல் போன்ற நச்சுத் தாதுக்கள் இருக்காது. அவை தாமிர உற்பத்தியில் வெளியாகும் கழிவுகள். அந்தப் பகுதியில் அதைச் செய்தது ஸ்டெர்லைட் மட்டுமே. அப்படியிருக்க நிலத்தடி நீர் ஸ்டெர்லைட் வளாகத்துக்குள் எடுக்காத ஒரே காரணத்தைக் கொண்டு அந்நிறுவனத்துக்கு இதில் பொறுப்பிருக்க வாய்ப்பில்லை என்று சொல்வதை நம்ப முடியவில்லை. அதோடு நிலத்தடி நீர் மாசுபாட்டில் மேற்கூறிய தாதுக்களால் ஏற்பட்டிருக்கும் மாசுபாட்டுக்கு உலோக உற்பத்தித் தொழிற்சாலைகளே காரணியாக இருக்கமுடியும். நிலத்தடி நீரில் அதிக அளவில் கலந்திருப்பது நிக்கல், ஆர்சனிக் போன்றவைதாம். அந்தப் பகுதியில் உலோகத் தொழிற்சாலைகள் இரண்டு மட்டுமே. ஒன்று தாமிர உற்பத்தி செய்யும் ஸ்டெர்லைட். மற்றொன்று கடற்கரை மண்ணிலிருந்து டைட்டானியம் டை ஆக்ஸைடு உற்பத்தி செய்யும் வி.வி. மினரல்ஸ்.

ஆய்வு முடிவு

இதேபோல் கடந்த வாரம் பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஓர் ஆய்வறிக்கை சமர்ப்பித்தது. அந்த ஆய்வின் மூலம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட பிறகு தூத்துக்குடியில் காற்று மாசுபாட்டின் அளவு குறைந்திருப்பது தெரியவந்தது. சல்ஃபர் டை ஆக்ஸைடு என்ற நச்சு வாயு காற்றில் கலப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. 

இதுதொடர்பாக திரு. நித்தியானந்த் ஜெயராமனைத் தொடர்புகொண்டு பேசினோம், "மத்திய நிலத்தடி நீர்வள வாரியம் 30 நீர் மாதிரளை எடுத்து ஆய்வுசெய்தார்கள். அனைத்தும் ஸ்டெர்லைட் வளாகத்தைச் சுற்றியிருக்கும் குடியிருப்புகளிலும் கிராமங்களிலுமே எடுக்கப்பட்டது. அவற்றில் நிலத்தடி நீர்வளத்தை அழிக்கும் மாசு காரணிகள் அதிக அளவில் இருப்பதாகக் கண்டுபிடித்து உள்ளார்கள். மாதிரிகள் ஸ்டெர்லைட் வளாகத்துக்குள் எடுக்கப்படாததால் இந்த மாசுபாட்டுக்கு ஸ்டெர்லைட் காரணமில்லை என்றும் நம்மால் சொல்லமுடியாது. நிலத்தடி நீரில் கலந்திருக்கும் மாசுபாட்டுக் காரணிகளைக் கவனிக்க வேண்டும். அத்தகைய நச்சுத் தாதுக்களை வெளியேற்றும் உலோகத் தொழிற்சாலைகள் ஸ்டெர்லைட் மற்றும் வி.வி மினரல்ஸ் நிறுவனங்கள்தாம். மற்ற நிறுவனங்களில் பெரும்பாலான பெரு நிறுவனங்கள் மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகளிலே... அங்கிருந்து எப்படி இந்தக் கழிவுகள் வரும்!? நீரில் கலந்திருக்கும் சல்ஃபேட்டுகள் ஸ்டெர்லைட், வி.வி மினரல்ஸ் இரண்டிலிருந்தும் வெளியேறக்கூடியவை. அதிலும் ஸ்டெர்லைட் சுமார் 400,000 டன்கள் கால்சியம் சல்ஃபேட்டைத் தன் சேமிப்புக் கிடங்கில் வைத்துள்ளது. ஸ்டெர்லைட்டின் அந்தச் சேமிப்புக் கிடங்கில் பாதியளவே இருப்பது வி.வி மினரல்ஸ். அதுபோக நிக்கல், ஆர்சனிக், தாமிரம், ஈயம் போன்ற நச்சுத்தாதுக்களும் நீரில் அதிக அளவில் கலந்திருக்கின்றன. அவை தாமிர உற்பத்தியின்போது மட்டுமே வெளியாகும். ஆய்வு நடத்தப்பட்ட பகுதியிலிருக்கும் ஒரே தாமிர உற்பத்தித் தொழிற்சாலை ஸ்டெர்லைட் தான்."

சிப்காட்

காற்றின் தரத்தில் முன்னேற்றமும், நிலத்தடி நீர்வள மாசுபாட்டு ஆய்வறிக்கையும் ஸ்டெர்லைட் ஆலை இயக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளன. பொதுநலன் எனும் அறத்துக்கு மாறாக வளங்களைச் சுரண்டுவதை மட்டுமே லட்சியமாகக் கொண்ட வேதாந்தா போன்ற நிறுவனங்கள் தங்கள் அடையாளங்களை இதைப் போன்ற மாசுபாடுகள் வழியாகவும் மக்கள் சிந்தும் ரத்தக் கரைகளின் வழியாகவுமே விட்டுச்செல்கிறார்கள். அதற்கு மற்றும் ஓர் ஆதாரமாக விளங்குகிறது இந்த ஆய்வறிக்கை.


டிரெண்டிங் @ விகடன்