மகாவீர் ஜெயந்தி: ஆளுநர், கருணாநிதி, விஜயகாந்த் வாழ்த்து

சென்னை: மகாவீர் ஜெயந்தியையொட்டி ஜெயின் மக்களுக்கு ஆளுநர், தி.மு.க. தலைவர் கருணாநிதி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு ஆளுநர் ரோசய்யா வாழ்த்து செய்தி: மகாவீர் ஜெயந்தியையொட்டி ஜெயின் சமூக உடன்பிறப்புகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மகான் மகாவீரர் அனைத்து ஆன்மாக்களின் சமத்துவத்துக்காக நிற்கிறார். அனைத்து மக்களுக்கும் அகிம்சை மற்றும் ஒற்றுமையை அறிவுறுத்தினார்.

அவரது பிறந்த நாளான இன்று அனைவரிடம் அன்பாகவும், மனதில் தூய்மை உண்மை மற்றும் மரியாதையுடன் கூடிய இணக்கமான சமுதாயத்தை உருவாக்க முடிவெடுப்போம்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி: ஜைன சமயக் கோட்பாடு களில் மனித நேயத்திற்கு வழிகாட்டும் சீர்திருத்தங்கள் பலவற்றைச் செய்த வர்த்த மான மகாவீரர் பிறந்த நாள் ஏப்ரல் 24ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.

மகாவீரர் பீகார் மாநிலத் தலைநகர் பாட்னாவுக்கு அருகில், ஓர் அரச குடும்பத்தில் கி.மு. 599ல் பிறந்தவர். இளமையிலேயே அரச வாழ்வைத் துறந்தவர்; தமக்குரிய செல்வங்களை எல்லாம் பலருக்கும் தானமாக வழங்கியவர்; கொல்லாமை, பொய்யாமை, களவு செய்யாமை, பேராசை கொள்ளாமை முதலிய நல்லறங்களைப் போதித்தவர்; தமது போதனைகள் படியே வாழ்ந்து காட்டியவர்.

மகாவீரரின் போதனைகளைப் பின்பற்றி தமிழகத்தில் வாழும் ஜைன சமுதாய மக்கள் தம் உற்றார், உறவினர், நண்பர்கள் சூழக் கொண்டாடி மகிழ்ந்திடவும், தமிழ் மக்கள் மகாவீரரின் பெருமைகளை அறிந்திடவும் உதவும் வகையில் மகாவீரர் பிறந்த நாளுக்கு கழக அரசு காலத்தில் அனுமதிக்கப்பட்ட அரசு விடுமுறையை 2002ல் அ.தி.மு.க. அரசு ரத்து செய்ததையும், 2006ல் கழக அரசு அமைந்ததும் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்தி ஜைன சமய மக்களை மகிழ்வித்ததையும் இன்று நினைவுபடுத்தி; இந்த ஆண்டின் மகாவீரர் பிறந்த தினத்தைக் கொண்டாடும் ஜைன சமய மக்கள் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்: அரச குடும்பத்தில் பிறந்தாலும் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்கின்ற ஒரே நோக்கத்திற்காக துறவறத்தை மேற்கொண்டவர் மகாவீரர் ஆவார். எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்பதையும், எந்த உயிருக்கும் எத்தகைய தீங்கும் செய்யக் கூடாது என்பதும் அவர் வகுத்த நெறிகளுள் தலையாயது ஆகும்.

குறிப்பாக சமண சமயத்தை சேர்ந்தவர்கள் பொழுது போவதற்குள் உணவு அருந்துவர். ஏனெனில் விளக்கேற்றிதான் சாப்பிட வேண்டும் என்றால் அதில் விட்டில் பூச்சிகள் விழுந்து இறந்து விடக்கூடாது என்பதே அவர்களது நோக்கம். அந்த அளவுக்கு கொல்லாமையையும், புலால் மறுத்தலையும் வாழ்க்கை நெறியாக மேற்கொண்டவர்கள். அத்தகைய அருளாளரான மகாவீரர் பிறந்த நாள் 24.04.2013 அன்று வருகிறது.

எல்லா மக்களுக்கும், குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கும் தங்களால் இயன்ற உதவியை செய்து வாழ வேண்டும் என்பதே மகாவீரர் பிறந்த நாளில் நாம் மேற்கொள்ள வேண்டிய கொள்கையாகும். இயன்றதை செய்வோம், இல்லாதவர்க்கே என்பதை குறிக்கோளாக கொண்ட தே.மு.தி.க. இந்த நன்னாளில் மகாவீரர் காட்டிய நெறியில் வாழும் அனைத்து மக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம்: பகவான் மகாவீரர் அவதரித்த இன்றைய நாள் ஒரு பொன்னாள். ஜைன மதத்தை நிறுவிய பகவான் மகாவீரர். தான் நிறுவிய மதத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, பிற மதத்தினரும் கடைபிடிக்கும் வகையில் நல்ல போதனைகளை உலகிற்கு தந்தவர்.

பல்வேறு நற்காரியங்களில் நாட்டில் உள்ள அனைவரும் ஈடுபட வேண்டும் என்று அறிவுரைகளை கூறிய பகவான் மகாவீரர் அவதரித்த இந்த நல்ல நாளில் ஜைன மதத்தினர் மட்டுமின்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் 'மகாவீர் ஜெயந்தி' தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!