வெளியிடப்பட்ட நேரம்: 16:45 (02/11/2018)

கடைசி தொடர்பு:16:45 (02/11/2018)

`ஸ்டார் வேல்யூ’ காரணத்தைக்காட்டி வசூலித்தால்... தியேட்டர்களுக்கு கடம்பூர் ராஜு எச்சரிக்கை

”பெரிய பட்ஜெட், ஸ்டார் வேல்யூ எனக் கூறி தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படம் எதுவாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அந்தத் திரையரங்கின் உரிமம் ரத்து செய்யப்படும்” எனச் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ``மாற்றுக்கட்சியிலிருந்து அ.தி.மு.க-வுக்கு வந்தவர்கள், மாற்று அணிக்குச் சென்ற காரணத்தால்தான் இன்று தேவையில்லாமல் இடைத்தேர்தல் வந்துள்ளது. இனி மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களை ஒதுக்கிவிட்டு உண்மையான விசுவாசிகளுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்து வெற்றி பெறுவோம். 18 எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகரிடம் விளக்கம் கேட்டபோதோ, நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்தபோதோ எங்களிடம் பேச வந்திருந்தாலும் அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு இருக்காது. தற்போது அரசியலுக்காக பல்வேறு கதைகளைக் கூறி வருகின்றனர்.

திரையரங்குளில் அதிக கட்டணம் வசூல் செய்வதை தடுத்து அரசு முறைப்படுத்தியுள்ளது. பண்டிகைக் காலங்களில் வெளியாகும் திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்வதைத் தடுக்க பல்வேறு அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. `ஸ்டார் வேல்யூ’ என்று கூறும் நடிகர்கள், திரைப்படங்களுக்கு அதிக கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்று அறிக்கை வெளியிட வேண்டும். இதனால் சிறு பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

`பெரிய பட்ஜெட்’, `ஸடார் வேல்யூ’ என்ற காரணம் காட்டி தீபாவளிக்கு வெளியாகும் திரைப்படம் எதுவாக இருந்தாலும் அதிக கட்டணம் வசூல் செய்தால் அந்த திரையரங்கின் உரிமம் ரத்து செய்யப்படும் என அரசும் அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையும் தெரிவித்துள்ளது. எனவே, அதிக கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்வதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும்.

திருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் எங்களது கட்சி போட்டியிடும். ஆனால், தேர்தலை மாநில அரசு நிறுத்தி வைத்துள்ளது என நடிகர் கமல் கூறியிருப்பது வேடிக்கையானது. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது, நிறுத்துவது குறித்து முடிவெடுப்பது தேர்தல் ஆணையம்தான். உள்ளாட்சித் தேர்தல், கூட்டுறவு சங்கத் தேர்தலை நடத்துவது மட்டுமே மாநில அரசின் கடமை. இதை அரசியலின் அரிச்சுவடி தெரியாமல் பேசி வருகிறார். அரசியலுக்கு புதிதாகக் காலடி எடுத்து வைத்துள்ள கமலுக்கு அவசரப்பட்டு விவரம் தெரியாமல் பேச வேண்டாம் என்பதே நாங்கள் கூறும் அறிவுரை” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க